In this article, we are providing பண்பாட்டுக் கலப்பு / பண்பாட்டுக் கூறுகள் என்றால் என்ன / நம் பண்பாட்டின் நீட்சி அடையாளமாக விளங்குவது எது / கலாச்சாரம்
பண்பாட்டுக் கலப்பு / பண்பாட்டுக் கூறுகள் என்றால் என்ன
In this article, we are providing பண்பாட்டுக் கலப்பு / பண்பாட்டுக் கூறுகள் என்றால் என்ன / நம் பண்பாட்டின் நீட்சி அடையாளமாக விளங்குவது எது / கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்றால் என்ன for Tamil Scholars.
பண்பாட்டுக் கலப்பு / பண்பாட்டுக் கூறுகள் என்றால் என்ன
வைணவ இலக்கியப் படைப்பாளிகளில் ஆண்டாள் சில தனிச்சிறப்புகளை உடையவராவார். பன்னிரு ஆழ்வார்களில் அவர் ஒருவரே பெண் என்பதோடு, மற்றுமொரு வைணவ இலக்கியப் படைப்பாளியின் மகள் என்பதும் அவர் பெற்ற சிறப்பாகும். தமிழ்நாட்டு வைணவர்களின் வழக்கில் உள்ள ஆண்டாளின் வாழித்திருநாமப்பாட்டு, “அவர் பெரியாழ்வாரின் மகள், திருமல்லிவளநாட்டைச் சேர்ந்தவர், திருஆடிப் பூர நாளில் பிறந்தவர். அரங்கனுக்கே மாலை சூடிக்கொடுத்தவர், இராமநுசரை அண்ணனாகப் பெற்றவர், திருப்பாவை முப்பது பாடல்களும் நாச்சியார் திருமொழி 143 பாடல்களும் பாடியவர்”, ஆகிய செய்திகளைத் தருகின்றது.
பிற்காலத்தவரால் ஓடம், ஊசல், கும்மி, பிள்ளைத்தமிழ் எனப் பல்வேறு சிற்றிலக்கியங்களும் வைணவத்தில் ஆண்டாளின் மீதே நிறையப் பாடப் பெற்றிருக்கின்றன. மேலும் திருப்பதி, திருவரங்கம் ஆகிய கோயில்களில் கருவறைக்குள்ளாகவும் தமிழகத்தின் வீதிகளிலும் இன்றளவும் பாடப்பெறும் இலக்கியமாகவும் அவரது திருப்பாவைப்பாடல்கள் அமைந்துள்ளன. அத்துடன் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னரே திருப்பாவைக்கு வைணவ உரையாசிரியர் அறுவர் உரையும் விரிவுரையும் எழுதியுள்ளனர். திருக்குறள், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களைத் தவிர்த்து மிகுதியான உரைகளைப் பெற்ற நூல் இதுவே எனலாம்.
தமிழ் இலக்கிய உலகில் திருப்பாவை அளவுக்கு அவரது மற்றொரு படைப்பான நாச்சியார் திருமொழி அறியப் பெறவில்லை. பதினான்கு திருமொழிகளாக அமைந்துள்ள இப்பாடல்களுக்குப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அறுவரும் இருபதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயங்காரும் உரை எழுதியுள்ளனர்.
வைணவத் தமிழ் இலக்கியங்களில் சாதி அமைப்புக்கு எதிரான ஒரு குரல் காலந்தோறும் தொடர்ந்து ஒலித்து வந்திருக் கின்றது. இதனைத் தொடங்கி வைத்தவராகத் தொண்டரடிப் பொடியாழ்வாரைக் குறிப்பிடலாம். இவரை அடுத்து இக்குரலுக்கு வலிமை சேர்த்தவராகப் பெரியாழ்வாரையும் அவர் மகளான ஆண்டாளையும் குறிப்பிட வேண்டும். வைணவ மரபுக் கதை களிலிருந்தும் பாடல்களிலிருந்தும் பிறப்பினால் இவர்கள் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் வாழ்ந்த காலத்திய சமூகத் தலைமை பார்ப்பனர்களிடமே இருந்தது. ஆனாலும் இதற்கு மாறான ஒரு குரலை இவர்கள் இருவரும் தங்களின் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர்.
பக்தி இலக்கியத்தின் முதன்மையான இலக்கிய உத்தி என்பது நாயகன் நாயகி பாவனை ஆகும். ஆனால் பெரியாழ்வார் தம் கவிதைகளில் கண்ணனுக்குத் தாயாக (இடைச்சாதிப் பிறப்புடையவளாக) தன்னைக் கற்பனை செய்து கொள்கிறார். பெண் என்பதால் ஆண்டாளுக்கோ நாயகி பாவனை தேவை யற்றதாக இயல்பாகவே கண்ணன் மேல் காதல் உணர்வு பெருக்கெடுத்ததாயிற்று. வைணவ உரையாசிரியர்கள், “ஏனை யோர் எல்லாம் பெண்ணாக வேஷம் கட்டிக்கொண்டு ஆடினார்கள்” என்றும், "ஆண்டாளின் காதல் உணர்வு பள்ளமடைபோல வேகமிகுந்ததாயிற்று” என்று விளக்குகின்றனர். திருப்பாவை முப்பது பாடல்களிலும் தன் தந்தையாரைப் போலவே ஆண்டாளும் தன்னை இடைச்சாதியில் பிறந்தவராக் கருதிக்கொண்டு தன் காதல் உணர்வினை வெளியிடுகிறார். நாச்சியார் திருமொழியிலும் இந்தச் சாதி ‘பாவனை' உணர்வு வெளிப்படையாகவே நிற்கின்றது. வடமதுரை, இடைச்சேரி, விருந்தாவனம் துளசிக்காடு) யமுனையாறு ஆகிய பிற்புலங்களைக் குறிப்பிடுவதோடு 'வாரணமாயிரம்' திருமொழியில் கண்ணனை ஆயன் என்ற சொல்லாலே குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம் மனங்கொண்டே, பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த பிள்ளை லோகாசாரிய ஜீயர் தம்முடைய ‘ஸ்ரீவசநபூஷணம்' என்னும் நூலில் “ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாரும், திருமகளாரும் கோப ஜந்மத்தை ஆஸ்தாநம் பண்ணினார்கள்” என்று குறிப்பிடுகின்றார்.
ஆண்டாளின் பாடல்களில் புலப்பாட்டு நெறி, பெருந் திரளான மக்களின் வாழ்வியல் சார்ந்ததாகவே அமைந் திருப்பதனை அவரது சொற்களிலும் தொடர்களிலும் காண முடிகின்றது. அவர் தேர்ந்தெடுத்த மொழி நடை இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டதாக அமைகின்றது என்பது வியப்பான செய்தியாகும். முள்ளில்லாத சுள்ளி, மேலாப்பு (தாவணி), கண்ணாலம், கட்டி அரிசி, பரக்கழி, குப்பாயம் ஆகிய சொற்கள் தென்மாவட்டங்களில் இன்றும் வழக்கில் உள்ளன. இவற்றுள் கடைசியில் அமைந்த பரக்கழி என்னும் சொல், “பழி உண்டாக்கும் பிள்ளையே” என்ற வசைச் சொல் ஆகும். இத்துடன் 'வசவு' என்னும் சொல்லையும் அதற்கு இணையாகத் தென் மாவட்டங்களில் வழங்கும் ‘ஏச்சு' என்னும் சொல்லையும் ஒருசேரப் பயன்படுத்துகிறார். மிகுதியும் சேட்டை செய்யும் பிள்ளையினை 'பரக்கழி' என்று ஏசுவது இன்றும் காணப்பெறும் நிகழ்ச்சியாகும். ஆண்டாள் பேசும் உண்பொருள்களும் எளிய மக்களால் நுகரப்பெறும் கட்டி அரிசி, அவல், பொரி முதலியனவே ஆகும். இவற்றுள் அவல், இன்றும் தென் கேரளத்தில் பெரிதும் நுகரப்பெறும் உணவாகும். கட்டி அரிசி என்பது கருப்பட்டிப் பாகுடன் கலந்து செய்யப்பெறும் அரிசிமாவினால் ஆன உணவாகும்.
சொல்லாலும் தொடர்களாலும் மட்டுமன்றி ஆண்டாள் காட்டும் வாழ்நெறிகளும் சடங்குகளும் உறவு முறை உணர்வுகளும்கூட எளியமக்களின் சார்பு உடையதாகவே அமைந்திருப்பதனைப் பார்க்கிறோம். நிறைவேறாத காதல் உணர்வால் தான் வாடுவதைப் பாடும்போது, 'நீர்க்காலத்து எருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை' என்கிறார்.
“கோடையிலே பாலறவுலர்ந்த எருக்கிலையிலே மழைத்துளி பட்டவாறே அற்று விழும்” என்று உரையாசிரியர் பெரிய வாச்சான் பிள்ளை இதற்கு விளக்கம் தருகிறார். விரும்பப் பெறாத எருக்கஞ்செடியும் அதன் காய்ந்த இலைகளும் அவற்றின் மழைக்கால வீழ்ச்சியும் 'உயர்சாதிப் பெண்ணொருத்தியின் அனுபவ எல்லைக்குள் எப்படி வந்தன என்று வியப்படைகிறோம்.
அதனைப்போலவே திருமணச் சடங்குகளைப் பேசும் 'வாரணமாயிரம் திருமொழி'யில் நாத்தனார் முறையுடைய துர்க்கை மணப்பெண்ணின் கழுத்தில் மாலை சூட்டுவதனையும் மணமக்களின் மேல் பொரி அள்ளிப்போடுதல் ஆகிய பார்ப்பனர் அல்லாத மக்களின் திருமணச்சடங்குகளையும் தன்வயப் படுத்திக்கொண்டு பாடுகிறார்.
மாமியார் - மருமகன் உறவுமுறை திராவிடர்களின் உறவுமுறையில் கூச்ச உணர்வும் விலக்குகளும் கொண்டதாகும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடத்தில் இவ்வுணர்வு இன்னும் கடுமையானதாகவே அமைந்திருக்கிறது. மகளைக் கொண்ட மருமகனின் முன் வந்து நிற்பதும் வரவேற்பதும் உணவு பரிமாறுவதும் உரையாடுவதும் இன்றும் பலசாதிகளில் விலக்கப்பட்டதாகவே இருக்கின்றன. ஆண்டாள் மூன்றாம் திருமொழியில் உடைகளைத் திருடிக்கொண்டு மரத்தின் மீது இருக்கும் கண்ணனிடம் தண்ணீர்க்குள் ஆடையின்றி நின்று கொண்டு உடைகளுக்காகக் கெஞ்சும் பெண்ணாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறாள். (பாகவதக் கதையில் வரும் இச்செய்தி சங்க இலக்கியத்திலும் பதிவு பெற்றுள்ளது) “மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங்கெல்லாரும் போந்தார்” என்பது ஆண்டாள் பாசுரம். “நாங்கள் உனக்கு மாமிமார் மக்கள் இல்லைதான், இருந்தாலும் இந்த நீர்த்துறைக்கு மற்றவர்களெல்லாம் வந்தார். உன் மாமிமார்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்,” என்பதே இதன் பொருள். “உனக்குக் கூச்சு முறையுடையாரெல்லாம் போந்தார் காண்” என்பது இவ்வரிகளுக்குப் பெரியவாச்சான் பிள்ளை தரும் உரையாகும்.
இவ்வாறு பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும் உணர்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு பாடினாலும், ஆண்டாள் தம்முடைய வைதிகப் பின்னணியினையும் கவிதைகளில் பதிவு செய்வது தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகின்றது. வேதவாய்த் தொழிலாளர் “வாயுடை மறையவர் மந்திரத்தால்”, “வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல்படுத்து”, “பார்ப்பனச் சிட்டர் தீர்த்தம்,” “தீவலம் செய்தல்”, “அம்மி மிதித்தல்” என்று பார்ப்பனர் வாழ்வியலின் அம்சங்களையும் அவரது கவிதைகள் எதிரொலிக்கின்றன.
வைதிகப் பின்னணியில் வளர்ந்த ஆண்டாள் வடமொழிப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பயிற்சி உடையவராக இருந்தார் என்பதனை நாச்சியார் திருமொழியில் ஓரிடத்தில் நுணுக்கமாக நம்மால் உணரமுடிகிறது. கருடனின் தாய் வினதை என்பவள். இவளின் சகக்களத்தியான கத்ரு இவளை வெயிலில் நிற்கவைத்துக் கொடுமைப்படுத்தினாள். அப்போது அவளை அவள் மகன் கருடன் தன் சிறகுகளை விரித்துக் காத்துநின்றான். மகாபாரதத்தில் வரும் இக்கதையினை நிறைவுபடுத்தும் வகையில் கருடனை ஆண்டாள் ‘வினதை சிறுவன்' என்று குறிப்பிடுகிறார். இந்த அளவு மகாபாரதக் கல்விப் பயிற்சி ஆண்டாளின் வைதிகப்பின்னணியை விளக்கப் போதிய சான்றாகும்.
மொத்தத்தில் ஆரியர், திராவிடர் என இருவகையான பண்பாட்டுக் கூறுகளின் கலப்பினை ஆண்டாள் மிகுந்த முயற்சியுடன் நம்முன் வைக்கிறார். பார்ப்பனரல்லாத மக்கள் திரளைத் தம்முடன் இணைத்துக் கொண்டால்தான் வைணவ சமயம் வாழமுடியுமென்று பிற்கால வைணவ ஆசிரியர்கள் தெளிந்த முடிவுக்கு வந்தனர். ‘முமுட்சுப்படி', 'ஸ்ரீவசநபூஷணம்', 'ஆசாரிய இருதயம்' ஆகிய மூன்று தத்துவ நூல்களிலும் இந்த உணர்வினை விரிவாகவும் ஆழமாகவும் காணலாம். இதற்கான வரலாற்றுப் பின்னணியில் ஆண்டாளுக்கும் ஓர் இடமுண்டு என்பதனை அவரது பாசுரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
COMMENTS