In this article, we are providing ஒரு சமணக் கோயில் / Oru Shramana Koil, கோயில்களின் வரலாறு, கோவில் பற்றிய கட்டுரை/ சமண கல்வெட்டு / சமண நூல்களின் ஆதிக்
ஒரு சமணக் கோயில் / Oru Shramana Koil
In this article, we are providing ஒரு சமணக் கோயில் / Oru Shramana Koil, கோயில்களின் வரலாறு, கோவில் பற்றிய கட்டுரை/ சமண கல்வெட்டு / சமண நூல்களின் ஆதிக்கம்
ஒரு சமணக் கோயில் / Oru Shramana Koil
கோத்த பொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் (பாரதியார்)
வரலாறு நெடுகிலும் நிரம்பிக்கிடக்கின்றன. ஆனால் இதுவே வரலாறு என்று கருதப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்பொழுது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. 'எழுதப்பட்ட வரலாற்று நூல்களைத் திருத்தி எழுதுவோம்' என்று எழுதிய அறிஞர் கோசாம்பி மேற்கிந்தியப் பகுதியில் தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்கினை எடுத்து விளக்கிக் காட்டினார். அடித்தள மக்கள் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்தும் பெறப்படும் செய்திகளால் ஆக்கப்படும் வரலாறு மட்டுமே சனநாயகத்தன்மை உடையதாக அமைந்திருக்கின்றது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் அண்மையில் 'மதச்சகிப்புத்தன்மை என்பது ஒரு கெட்ட வார்த்தை ', எனக் கூறியிருந்தார். கள ஆய்விற்குச் சென்றவர்களால் தான் இந்த வார்த்தையின் கனத்தை அறிய இயலும். எளிய மக்கள் எந்த மதத்தையும் சகித்துக்கொண்டிருக்கவில்லை. எல்லா மதங்களின் இருப்பையும் வாழ்வையும் தன் இயல்பாகவே அல்லது இயற்கையாவே அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் மேலச்செவலிலிருந்து களக்காடு நோக்கிச் செல்லும் சாலையில் 8 கி.மீ. போய்விட்டால் சிங்கிகுளம் என்ற சிற்றூர். ஊருக்குக் கிழக்கே ஒரு சின்ன மலை. மலை என்றால் சிறு புதர்களும் சில ஆலமரங்களும் கொண்ட நூறடி உயரமுள்ள ஒரு நெடும் பாறை. அவ்வளவுதான். மலையின் மீது தெற்கு நோக்கி ஒரு சின்ன கோயில். ‘கல்வெட்டு இருக்கிறது' என்று ஊர் மக்கள் சொன்னார்கள். சாலையில், 'பகவதி அம்மன் கோவில் செல்லும் வழி' என்று ஒரு விளம்பரப் பலகை. பலகையை ஒட்டிய குளத்துக் கரைமீது அரை கிலோ மீட்டர் சென்றால் மலைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுக்கள். 150 படிகள் ஏறினால் கோயிலின் பின்பக்கமுள்ள ஒரு சின்னச் சுனையினை அடையலாம்.
கோயிலுக்குள் சென்று பார்த்தபோது விழிகொள்ளாத வியப்பு அங்கே நமக்காகக் காத்துக்கிடந்தது. கோயிலின் தெற்கு வாசல் வழியாக உள் நுழைந்தால் எதிரே பகவதி அம்மன் சந்நிதி. அது ஒரு சமணக் கோயில் என்பதை அறிந்த போது நமக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. பகவதி அம்மன் சந்நிதிக்கு மேற்கே கருவறையில் ஒரு தீர்த்தங்கரர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றி சம்பந்தர் ‘புண்ணியம்' தேடிக்கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை உயிரோடிருந்தது. நெல்லை மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காடுகளிலும் வயல்களிலும் சிதறியும் உடைந்தும் கிடக்கும் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளே இதற்குச் சான்றுகளாகும். நெல்லை மாவட்டத்திலிருந்து சமணம் ‘தொலைந்து போய்' எழுநூறு ஆண்டுகள் ஆனபிறகும் இந்தக் கோயில் மட்டும் உயிரோடு நிற்கின்றது. கோயிலைச் சுற்றி ஆராய்ந்தபோது, தீர்த்தங்கரர் இருக்கும் கருவறையைச் சுற்றி வெளிப்புறமாக இருக்கும் கல்வெட்டு நமக்கு வரலாற்று உண்மையினைச் சொல்கின்றது. அந்த ஒற்றைக் கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைத்த செய்தி.
இது ஒரு சமணப் பள்ளி' (சமணர்கள் கோயில் என்று சொல்ல மாட்டார்கள்) இம்மலையின் பெயர் ஜினகிரி. முள்ளிநாட்டுத் திடியூரான இராசராச நல்லூரில் உள்ள இந்தப் பள்ளியின் பெயர் ‘நியாய பரிபாலனப் பெரும்பள்ளி'. இப்பள்ளி “எனக்கு நல்ல பெருமானான அண்ணன் தமிழப் பல்லவரையன்” பெயரால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்கரருக்கு இடப்பட்ட பெயர் 'எனக்கு நல்ல நாயகர்' என்பதாகும். 24 தீர்த்தங்கரர்களில் இவர் யார் என்று அறியத் திருமேனியில் தடயங்கள் கிடைக்கவில்லை . நெல்லை மாவட்டப் பகுதியில் 'அம்பிகா யட்சி' என்ற இசக்கியம்மன் வழிபாடே இன்றும் செல்வாக்குடன் திகழ்கின்றது அம்பிகாவைப் பணிமகளாகக் கொண்டவர் 23 ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் என்பவராவார். கட்டப்பட்டபோது துணைச் சந்நிதியாக இருந்த யட்சியின் சந்நிதியே இன்று முதல் சந்நிதியாகவும் தீர்த்தங்கரரின் கருவறை துணைச் சந்நிதியாகவும் மக்களால் வணங்கப் பெறுகின்றன. இக்கோயிலில் இரத்தப் பலி கிடையாது. கொடியேற்றம், திருவிழா கிடையாது. மக்கள் தாங்கள் விரும்பும் நாளில் பகவதி அம்மனுக்குப் பொங்கல் வைக்கின்றனர்.
தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற “இந்து” மக்களுக்குத் தெரியவே தெரியாது. வைதீகத்துக்கு எதிரான சமணமதம் இப்பகுதியில் காணாமல்போய் எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனபோதும் சமணப்பள்ளி ஒன்று தாய்த் தெய்வக் கோயிலாகக் கருதப்பட்டு அந்நிலப்பகுதியிலுள்ள எல்லா மக்களாலும் பேணப்படுகின்றது, வழிபடப்படுகின்றது.
உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. ஆதரவற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாக எடுத்து வளர்த்து குடிப்பெருக்கம் செய்வதில் தமிழ்நாட்டின் எளிய மக்களுக்கு எந்தவித மனத் தடையுமில்லை. அப்படித்தான் சிங்கிகுளம் மக்கள், சமணப்பள்ளியைப் பகவதி அம்மன் கோயிலாக்கி வாழ வைத்திருக்கிறார்கள். அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். சிங்கிகுளம் ‘நியாய பரிபாலனப் பெரும்பள்ளி' நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான்.
COMMENTS