சித்திர புத்திர நாயனார் கதை - Chitragupta Nayanar Story in Tamil Language சித்திர புத்திர நாயனார் கதை : In this article, we are providing Chitragupta
சித்திர புத்திர நாயனார் கதை - Chitragupta Nayanar Story in Tamil Language
சித்திர புத்திர நாயனார் கதை
சித்திரை மாதம் முழுநிலவு நாளன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் வீட்டு விழாக் களில் ஒன்று நயினார் நோன்பு என்றழைக்கப்படும் சித்திரகுப்த நயினார் நோன்பு ஆகும்.
தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்பட் டாலும் இந்நோன்பு ஆற்றுப்பாசனம் உள்ள இடங்களில்தான் தவறாமல் கொண்டாடப்படுகிறது. தமிழ் பேசும் நிலவுடைமைச் சாதியினராலும் வணிகச்சாதியாராலும் இந்நோன்பு விருப்பமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறு நிலவுடைமைச் சாதிகளாலும் ஒன்றிரண்டு இடங்களில் கடைப் பிடிக்கப்படுகிறது. சித்திரை முழுநிலவு நாளில் இரவு முழுவதும் சித்திரகுப்த நயினார் கதையைப் படிக்கின்றனர். மறுநாள் காலையில் உணவில் அகத்திக்கீரையும் ஒரு சிறுதுண்டு எள்ளுப் பிண்ணாக்கும் சேர்க்க வேண்டும். தாமிரபரணி பாசனப்பகுதியில் காலைச் சிற்றுண்டியோடு அரிசி அவலும் (ஊற வைத்து) அகத்திக்கீரையும் எள்ளுப் பிண்ணாக்கும் சேர்த்துக்கொள்கின்றனர். சித்திரை முழு நிலவு நாளில் இரவு நேரத்தில் சித்திரகுப்த நயினார் கதை படிக்கும் வழக்கம் இன்று இல்லை.
சித்திரகுப்த நயினார் என்ற பெயரில் உள்ள நயினார் என்ற சொல் மேட்டிமையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரகுப்தன் என்ற தெய்வத்திற்குத் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு இடங்களில் கோவில்கள் இருக்கின்றன. தேனி மாவட்டம் போடிக்கு அருகில் ஒரு சிறுகோவிலும் திருச்செந்தூருக்கு அருகில் ஆற்றூர்ச் சோமநாதர் கோவிலுக்குள் ஒரு சிறு சன்னதியும் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் தெற்கு ரத வீதி எனப்படும் நெல்லுக்காரத் தெருவில் இத்தெய்வத்திற்கு என்று தனிக்கோயில் அமைந்திருக்கின்றது. இரண்டு கைகளுடன் தெற்கு நோக்கி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் ஒரு கையில் ஏடும் மறுகையில் எழுத்தாணியும் கொண்டு இத்தெய்வம் காட்சியளிக்கிறது.
சித்திரகுப்த நயினார் கதை நாட்டார் கதைப்பாடலாகவும் தமிழகத்தில் வழங்கி வருகிறது. இக்கதைப்பாடலைச் சுத்தப்பதிப்பாக 'லாங்மேன்ஸ் க்ரீன்' கம்பெனியார் 1915இல் வெளியிட்டுள்ளனர். நாட்டார் நம்பிக்கைகளின்படி சித்திரகுப்தன் எமனுடைய கணக்குப் பிள்ளையாவார். ஒவ்வொரு தனிமனிதனும் செய்கின்ற பாவ புண்ணிய கணக்குகளைப் பதிந்து அவருடைய வாழ்நாள் கணக்கையும் குறிப்பிட்டு இறப்பின் கடவுளான எமனுக்குத் துணை செய்வது இவரின் பணியாகும். இத் தெய்வத் தின் பெயரிலுள்ள குப்தன் என்பது இன்று குப்தா என்று வழங்கும் பெயரின் மூல வடிவமாகும் (உதாரணமாக, புபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா என்று நினைத்துக் கொள்க).
மத்திய இந்தியப் பகுதியிலும் கிழக்கிந்தியப் பகுதியிலும் கணக்குப்பிள்ளை சாதியின் பட்டப்பெயர் ‘காயஸ்தா', 'காயஸ்தர்' என்பதாகும். காயஸ்தர் சாதிக்குரிய பெயர்களாகக் ‘கரண' (தமிழ்க் கல்வெட்டுக்களில் ‘கரணத்தான்') கர்ணீக் (தமிழ்நாட்டில் கர்ணீக முதலியார்) ‘சித்திரகுப்த', 'புஸ்தபால' (புஸ்தக பாலர்) லேகா (எழுத்தர்), தர்மலேகின் (தருமக் கணக்கு எழுத்தர்) ஆகியவை பீகார், உத்திரப்பிரதேச மாநிலங்களில் வழங்குவதாக ஆர்.எஸ். சர்மா குறிப்பிடுகின்றார். 'கர்ணீக' என்ற பெயர் வங்காளத்திலும் மேற்கிந்தியப் பகுதிகளிலும்கூட வழங்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். எனவே இத்தெய்வம் வடஇந்தியாவில் பிறந்து தென்னிந்தியாவில் நுழைந்திருக்க வேண்டும் எனத்தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரே இத்தெய்வம் பற்றிய குறிப்பினை முதன்முதலில் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்கிறார்.
சித்திரகுப்தன் எழுத்தால்
தென்புலக் கோன்பொறி யொற்றி
வைத்த விலச்சினை மாற்றித்
தூதுவ ரோடி யொளித்தார்
சித்திரகுப்தன் எழுதிய கணக்குப்படி தென்புலக் கோனாகிய எமன் காலமுத்திரை இடுகிறார். திருமாலின் அடியவர்களைக் கண்டால் எமனின் தூதுவர் ஓடி ஒளிந்துகொள்வார். இதுவே இப்பாடல் வரிகள் உணர்த்தும் பொருளாகும். தமிழ்நாட்டில நிலவுடைமை வளர்ச்சி பெறத்தொடங்கிய கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதலாக நில அளவு, நிலவரி, நிலவுடைமை ஆகியவை குறித்த பணிகளைக் கவனிக்க அரசர்கள் ஒரு பணித்துறை யினை உருவாக்குகின்றனர். இப்பணித்துறைக்கு “புரவுவரித் திணைக்களம்” என்று பெயர். வரிமுறைகளில் ஏற்படும் மாற்றங் களைக் குறிக்கும் ஏடு 'வரிப்பொத்தகம்' எனப்பட்டது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர், சோழர் கல்வெட்டுக்களில் (மேற்காணும் சொற்கள்) திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நில ஆவணங்களில் கையெழுத்திட்ட அதிகாரி 'ஊர்க்கரணத்தான்' எனப்பட்டார். இவரே பிற்காலத்தில் சிற்றூர்களில் நில அளவுக் கணக்குகளை வைத்திருந்த கணக்குப் பிள்ளையின் முன்னோடியாவர். கணக்குப் பிள்ளை பதவி பரம்பரைப்பதவி என்ற உரிமையினை காலனிய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. 1984இல் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகே இப்பரம்பரைப் பதவி ஒழிக்கப்பட்டது.
தமிழகத்தில் நில ஆவணங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் பெரும்பாலும் இரண்டு சாதியாரே இருந்துள்ளனர். தமிழகத்தின் தென்பகுதியில் பிள்ளை என்ற சாதிப்பட்டமுடைய வேளாளச் சாதியினரின் உட்பிரிவினர்களும், வடபகுதியில் கருணீக முதலியார் எனும் சாதியினரும் நில ஆவணங்களின் அதிகாரி களாக இருந்துள்ளனர். கல்வெட்டுகளில் ‘காரணத்தான்' என்று குறிப்பிடப்படும் சொல்லே பின்னர் ‘கருணீகர்', 'கருணீக' என்றாகிக் காலனீய ஆட்சிக் காலத்தில் 'கர்ணம்' என்ற சொல்லாக விளங்கியது. சித்திரகுப்தர் கணக்கெழுதும் சாதிக்குரிய தெய்வமாகவே தமிழ்நாட்டில் நுழைந்திருக்க வேண்டும். காஞ்சி புரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயில் கருணீக முதலியார் சாதியினர்க்கு உரிமை உடையதாகும். (அதன் பிற்புலத்தில்தான் சித்திரகுப்தன் கோயிலுக்குள் கருணீக முதலியார் சாதியைச் சேர்ந்த வள்ளலாருக்கும் பிற்காலத்தில் ஒரு சந்நிதி உருவாக்கி வைத்துள்ளனர்.)
மேலோர் மரபில் நில ஆவணக் கணக்கெழுதுவோரின் தெய்வமாக இருந்தாலும் சித்திரகுப்தர் வழிபாடு நாட்டார் மரபிலும் இன்று தன்னைத் தகவமைத்துக் கொண்டது. அதாவது நிலக்கணக்குகளைப் போல ஒரு மனிதனின் பாவ புண்ணியக் கணக்குகளைச் சித்திரகுப்தர் எழுதுகிறார் என்பதே அது.
எனவேதான் நாட்டார் மரபுகளில் ஈடுபாடுடைய கவிஞர் பெரியாழ்வார் சித்திரகுப்தனைப் பாவபுண்ணியக் கணக்கெழுதுபவனாகக் காட்டுகிறார். சித்திரகுப்த நயினார் ககையின்படி. “பாவிக்கணக்கும் பஞ்சபாதகர் கணக்கும் நாகலோகத்திலுள்ள நன்மையுள்ள தன் கணக்கும் பூமிதனில் மாயவனார் புண்ணியபாவக் கணக்கும் எல்லாக் கணக்கும் எழுதி” கொடுப்பதுதான் சித்திரகுப்தருக்கு சிவபெருமான் இட்ட பணியாகும். அதன்படியே சித்திரகுப்தன் இரண்டு பக்கமாக கணக்கெழுதுகிறார். இவர்களெல்லாம் பாவக்கணக்குக்கு உட்பட்டவர்கள்: “பெற்றதாய் தந்தையைப் பேணாத பாவியர்கள் மண்ணிலிருந்து வழக்கோரஞ் செய்தவர்கள் அம்பலத்தில் நின்று அநியாயஞ் சொன்னவர்கள் ஊரார் உடைமைக்குப் பேராசை கொண்டவர்கள் கல்லாக் கசடர் கணக்குப் படியாதோர் சிவனை வணங்காதார் திருக்கோயில் சூழாதார் அயனை வணங்காதார் ஆலயத்தை மேவாதார் பிச்சைக்கு வந்தவரைப் பின்னேவாவென்பவர்கள் கன்று வருந்த கறந்த பால் உண்டவர்கள் சுற்றங்கொதிக்கச் சுரந்த பால் உண்டவர்கள் பொட்டிநாழி மரக்கால் போட்டளந்த பாவியர்கள் பிள்ளையழித்துப் பேதமுறக் கொன்றவர்கள் உள்ள பொருளை இல்லையென்றே உரைத்தவர்கள் தூர வழிக்குத் துணைவாரோ மென்று சொல்லி ஆருமில்லாக் காட்டில் அடித்துப் பறித்தவர்கள்.”
புண்ணியக் கணக்குக்கு உட்பட்டவர்கள் பட்டியல் பின்வருமாறு அமைகின்றது: “பசியாமல் அன்னம் பாங்குடனே கொடுத்தவரை இடுக்கத்துடனே ஏமாறி வந்தவர்க்கு உடுத்த புடவையுகந்தளித்தோர் தங்களையும் பிச்சையுமிட்டுப் பெரிய இடங்கொடுத்து மகேசுவர பூசைக்கு மடங்கட்டி வைத்தவரை சாலை மரமுஞ் சத்திரமும் வைத்தவரை சிவபூசை தவபூசை குருபூசை செய்வோரை நான்கு திசைவிளங்க நந்தவனம் வைத்தவரை ஆலயங்கள் கட்டி யன்னமிகக் கொடுப்போரை இடிந்த பழங்கோயிலெடுத்துப் புதுப்பித்தவரை தாகத்துக்காகநல்ல தண்ணீர் கொடுத்தவரை பொரிந்த வுயிர்தனக்குப் போகநீர் விட்டவரை இராக்காலப் பட்டினியை யிதமாகத் தீர்த்தவரை பஞ்சம் வருங்காலம் பகுத்தன்ன மிட்டவரை பெரியோர்கள் தங்களையும் பேணி நடந்தவரை விருந்துகள் வந்தால் வேறுவைத்து உண்ணாமல் வைத்து வகையில் வஞ்சகம் செய்யாரை.”
நாட்டார் மரபு சித்திரகுப்தன் கதையை உட்கொண்ட முறையினைப் பின் வருமாறு விளங்கிக் கொள்ளலாம். வடபுலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த சித்ரகுப்தத் தெய்வம் ஓர் அவைதீகத் தெய்வமாகும். வடநாட்டில் பெருவணிகர்களின் மதமாக விளங்கிய (விளங்குகின்ற) சமணமதத்தின் தெய்வமாக இது இருக்கலாம். இறப்பினை (மரண அச்சத்தை) முன்னிறுத்தி அறம் சொல்லும் வழக்கத்தைச் சமய மதமே தமிழ்நாட்டில் தோற்றுவித்தது. எனவே மேலோர் மரபில் கணக்குவழக்கு முறைமையில் தெய்வமான சித்திரகுப்தன், நாட்டார் மரபில் இறப்பினை முன்னிறுத்தி நியாயக்கணக்குப் பார்க்கும் தெய்வமாக பண்பு மாற்றம் பெற்றிருக்கின்றது.
நயினார் நோன்பு அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கா விட்டால் (இறப்புச் சடங்கின் ஒரு பகுதி) சித்திரகுப்த நயினார் செக்கிலிட்டு நம்மை ஆட்டுவார் என்ற நம்பிக்கையும் இதனடிப்படையிலேயே தோன்றியிருக்க வேண்டும்.
COMMENTS