ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும் Alwar Padalgal Kannam Pattam

ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும் Alwar Padalgal Kannam Pattam

கண்ணன் பிறந்தான் - எங்கள் - கண்ணன்

பிறந்தான் புதுக்

கவிதைகள் பிறந்ததம்மா ...

என்பது ஒரு திரைப்படப் பாடலடியாகும். கவிஞர் கண்ணதாசன் இந்த அடியினை ஆராய்ச்சி உணர்வோடு எழுதினார் என்று கொள்ளுவதற் கில்லை. இருப்பினும் இந்திய மொழிகளில் இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரை 'கண்ணன்' என்னும் தெய்வம் இந்திய மொழிகளில் கவிதையின் ஊற்றுக் கண்ணாக விளங்கியிருப்பதை உணரலாம்.

வைணவம் குறித்த தொன்மையான சான்றுகள் நமக்குச் சங்க இலக்கியத்திலேயே காணக்கிடைக் கின்றன. கண்ணனார், காரிக்கண்ணனார், விண்ணந்தாயன் ஆகிய வைணவப் பெயர் மரபு களைச் சங்கப் பாடல்களின் துறைக்குறிப்புகளில் காணுகிறோம். இவற்றுள் 'விண்ணன்' என்பது ‘விஷ்ணு ' என்ற பெயரின் தமிழிய வடிவமாகும். காரிக் கண்ணன் என்பது வாசுதேவ கிருஷ்ணன் என்ற பெயரின் தமிழ் வடிவமாகும்.

செங்கட்காரி கருங்கண் வெள்ளை

பொன்கட் பச்சை பைங்கண்மா அல்

என்று பரிபாடல் திருமாலின் ‘வியூக' அவதாரங்களைப் பதிவு செய்கின்றது. 'செங்கட்காரி' என்ற பெயரே காரிக்கண்ணன் என்று தமிழில் வழங்கப்பெற்றது என்பதைப் புலவர் ஒருவர் பெயரால் அறிகிறோம்.

கண்ணன் என்ற பொதுப்பெயரால் பக்தி இலக்கியங்களில் குறிக்கப்படும் தெய்வம் இந்த வாசுதேவ கிருஷ்ணனேயாகும். இருபது நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் மாறாத மக்கள் பெயர் வழக்குகளாக விளங்கும் பெயர்கள் கண்ணன், குமரன், சாத்தன், முருகன் என்ற மிகச் சிலவே ஆகும். ‘கண்ணன் பாட்டு' என்ற பெயரில் பாரதியார் ஆக்கித்தந்த 23 பாடல்களுக்கும் தமிழ் இலக்கியத்தில் தொன்மையான வேர்கள் உண்டு என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வேர்களைக் குறித்த மு. இராகவையங்காரின் 'கண்ணபிரானைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள்' என்னும் கட்டுரையும் இங்கே நினைவு கொள்ளத்தக்கது.

'விபவம்' என்னும் இதிகாசப் பிறப்பிற்குக் காரணமான இராமன், கிருஷ்ணன் என்னும் இரண்டு அவதாரங்களில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்த பக்தி இயக்கத்தின் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. இராம அவதாரத்தை விதிவிலக்காக மட்டுமே அது கொண்டாடியது. அதுபோலவே பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர ஆட்சிக் காலத்தில்தான் இராம அவதாரத்திற்கான கோயில்களும் தமிழ்நாட்டில் ஓரளவு எழுந்தன. தமிழ்நாட்டில் கிடைக்கும் திருமாலின் வெண்கலத் திருமேனிகள் எல்லாம் பெருமளவு கிருஷ்ண அவதாரம் சார்ந்ததாகும். கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பின்னையைக் கொண்டாடின.

நாண் இத்தனையும் இலாதாய்

நப்பின்னை காணில் சிரிக்கும்

என்று பெரியாழ்வார் கண்ணனுக்கு நப்பின்னையை முறைப் பெண்ணாகவே காட்டுகின்றார். நாச்சியார் திருமொழியில், ‘மாமிமார் மக்களேம்', என்றே ஆண்டாள் மைத்துன உறவுமுறை களைக் குறிக்கின்றார். பாலியல் ரீதியிலான இந்த முறைப்பெண் - முறை மாப்பிள்ளை உறவுமுறை திராவிடர்களுக்கே உரியது என்று ஹட்ட ன் குறிப்பிடுவார். (HUTTON. J.H., Caste in India, Oxford University Press, Bombay, Reprint, 1969).

கண்ணன் என்னும் தெய்வம் குறித்துச் சங்க இலக்கியத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் பிற்காலத் தத்துவ நூல்களிலும் உள்ள செய்திகள் மூன்று அடுக்குகளாக உள்ளன.

1. பாகவதக் கதைகள் காட்டும் கண்ணன்

2. பாரதமும் இராம காவியமும் காட்டும் கண்ணன்

3. கீதை என்னும் தத்துவ நூல் காட்டும் கண்ணனைவிட முதன்முதலாக இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் பாகவதக் கதை காட்டும் கண்ணனையே பெருமளவு இராம, கிருஷ்ண அவதாரக் கதைகளுடன் கலந்து காட்டுகின்றார்.

மூவுலகு மீரடியான் முறை நிரம்பா வகை முடியத்

தாவிய சேவடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே

என்பது ஆய்ச்சியர் குரவைப் பாடலாகும்.

ஆனாலும் பின்வந்த ஆழ்வார்கள் கிருஷ்ண (கண்ணன்) அவதாரத்தையே பெரிதும் கொண்டாடினர். கீதை உரைத்த கண்ணனைப் பற்றிய குறிப்புகள் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஒன்றிரண்டு மட்டுமே வருகின்றன. சமகாலச் சூழலில் இது வியப்புக்குரிய செய்தியே. ஆனாலும் இதுவே உண்மையாகும்.

கீதை உரைத்த கண்ணனை நான்முகன் திருவந்தாதியில் வரும்

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்

ஆயன் துவரைக் கோன் ஆய் நின்ற மாயன் அன்(று)

ஓதியவாக் கதனைக் கல்லார் உலகத்தில்

எதிலராய் மெய்ஞ்ஞானமில் (71)

என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே குறிப்பாகப் பேசுகின்றது. பிற்காலத்தில் வைணவ ஆசாரியர்கள் மட்டுமே கீதையினைச் சற்றே விரிவுபடுத்துகின்றனர். ஆழ்வார்களின் பாசுரங்களில் அதற்கு இடமில்லை .

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த

மெய்ம்மைப் பெருவார்த்தை

என்ற ஆண்டாளின் பாசுரம் கீதையினைக் குறிப்பாகச் சுட்டுவ தாகப் பிற்கால உரையாசிரியர்கள் வலிந்து பொருள் கூறுகின்றனர்.

கிருஷ்ண வழிபாட்டில் பாகவதக் கதைகளே மிகத் தொன்மையானவையாகும். இந்தப் பாகவதக் கதைகளில் மிகப் பழமையான குருந்து ஒசித்த கதை,

வடா அது, வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை

அண்டர் மகளிர் தண்டழை யுடீ இயர்

மரஞ்செல மிதித்த மாஅல் போல

எனச் சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளது. மல்லரை அட்டது, மதயானையை வென்றது, சகடாசுரனை வென்றது, பாம்பினைக் கயிறாகக்கொண்டு கடல் கடைந்தது, கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தது, மரக்கால் ஆடல் ஆடிக்காட்டியது, குடக்கூத்து ஆடியது ஆகியவற்றை இராமாயண பாகவதக் கதைகளோடு இளங்கோவடிகள் கலந்துகாட்டுகின்றார். ஆழ்வார் பாசுரங்களோ பாகவதக் கதைகள், பாரதம்சார் கதைகள், இராமாவதாரக் கதைகள் என்ற அளவிலேயே கதைகளைப் பதிவு செய்கின்றன.

ஆழ்வார்கள் பாசுரங்கள் கண்ணனைப் பெருந்தெய்வமாகக் காட்டும் அதே வேளையில் அவனை மிக எளியவனாகவும் காட்டுகின்றன. சௌலப்யம் (எளிவந்த தன்மை) என்பது கண்ணன் அவதாரத்தின் உயர்ந்த பண்புகளில் ஒன்று. துறையும் படியுமாக அமைந்த ஆறுபோல அல்லாமல் அடியார்க்கு அவன் இறங்கிய இடமெல்லாம் துறையாகும்படி இருப்பான் என்பதே இதன் விளக்கமாகும். ('அடியார்க்கு இழிந்த இடமெல்லாம் துறையாகும்படி' எனப்பிற்கால ஆசாரியர்கள் உரை வியாக்கியானம் செய்வர்.) எனவே தயக்கமின்றி ஆழ்வார்களின் பாசுரங்கள் கண்ணனைப் பலபட உரிமையுடன் பழிக்கின்றன

கண்ணன் பெருவயிற்றுக்காரன். “சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்று” (பெரியா. திருமொழி) அவன் வெண்ணெயும் தயிரும் திருடித் தின்பவன். “கறந்தநற் பாலும் தயிரும் கடந்துறி மேல் வைத்த வெண்ணெய், பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே” (பெரியா. திருமொழி). "தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி” (திருமங். சிறிய திருமடல்) ஏதும் அறியாதவன்போல் பொய்யுறக்கம் கொள்ளுபவன். அவன் ஒரு பொய்சொல்லி. “புறம்போலும் உள்ளும் கரியன்” (நாச்சியார் திருமொழி)."புல்லாணி எம்பெருமான் பொய்கேட்டு) இருந்தேனே” (திருமங்கை) என்று புலம்புகிறாள் ஒரு கன்னி. அவன் தாய் அவனைக் கண்டித்து வளர்க்கத் தவறிவிட்டாள். "அஞ்ச உறப்பாள் அசோதை, ஆணாட விட்டிட்டு) இருக்கும்” (நாச்சியார் திருமொழி). ஆனால் அந்தத் தாயோ பேய்ச்சி முலையுண்டு அவளைச் சாகடித்த இந்தப் பிள்ளையிடம் ஏதும் சொல்ல அச்சப்படுகிறாள். “பேய்ச்சி முலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசவும் அஞ்சுவனே” (பெரியா. திருமொழி). அத்துடன் பாகவதக் கதைகள் சொல்லாத குறும்புகளையும் ஆழ்வார்களின் பாசுரங்கள் பேசுகின்றன. வீட்டில் தனியாக இருந்த கன்னியின் கையைப் பற்றி அவள் வளைகளைக் கவர்ந்து போய்க்கொடுத்து நாவற்பழம் வாங்கித் தின்றானென்று கண்ணக் குறும்புகளை ஆழ்வார் பாசுரங்கள் பேசுகின்றன.

இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக்

கையில்வளையைக் கழற்றிக் கொண்டு

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற

அங்கொருத்திக்(கு) அவ்வளைகொடுத்து

நல்லன நாவற்பழங்கள் கொண்டு

நானல்லன் என்று சிரிக்கின்றானே

என்பது பெரியாழ்வார் பாசுரம்.

இந்தப் பிற்புலத்தில் பாரதியின் கண்ணன் பாடல்களை நோக்குவது மரபுசார்ந்த ஒரு முறையாகும். மற்றொரு வகையாகக் கண்ணன் பாட்டுக்களின் தனித்தன்மை எனப் பேசத்தக்க சிலவற்றை முதலில் காணவேண்டும். கண்ணனை 'எல்லாம்' ஆகப் பார்க்கும் பாரதியின் பார்வை ஆழ்வார்களிடமிருந்து கவித்துவ அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது.

மழைக்குக் குடைபசி நேரத் துணைவென்றன்

வாழ்வினுக் கெங்கள் கண்ணன்


பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவதற்கே - இனி

என்ன வழியென்று கேட்கில் உபாயம்

இருகணத் தேயுரைப்பான்.

(கண்ண ன் என் தோழன்)

கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வ மாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்கப் பாரதியோ தாயாக வும் தோழனாகவும் சற்குருவாகவும், ஆண்டானாகவும் அடிமை யாகவும் நாயகியாகவும் பார்க்கிறான். தெய்வத்தை வைதீகச் சமயங்கள் நாயக - நாயகி பாவனையில்தான் பெரும்பாலும் பாடியிருக்கின்றன. பாரதியோ நாயிகா - நாயக பாவத்தில் பாடத் துணிந்திருக்கின்றான். 'கண்ணம்மா என் காதலி' என்ற தலைப்பில் அமைந்த பாடல்கள் தமிழ் அகப்பொருள் மரபினை மீறியவையாகும். (இசுலாமிய மரபில் குணங்குடி மஸ்தானின் ‘மனோன்மணிக்கண்ணி' பாரதிக்கு முன்னான ஒரு மரபு மீறலாகும்). மற்றொன்று, தெய்வத்தைக் கவிஞன் தன் வேலைக்காரனாகக் கண்டு பாடுவதாகும். இதுவே பாரதி படைத்த புதுமையாகும். 'விளிம்பு நிலை மனிதர்கள்' என்ற சொல்லாடல் கேட்கப்பெறாத காலத்தில் பாரதியின் இந்த ‘சனநாயக உணர்வு' காலப் பிற்புலத்தோடு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 'கண்ணன் என் ஆண்டான்' என்ற தலைப்பில் அமைந்த பாடல் பள்ளு இலக்கியங்களின் பாதிப்பைப் பெற்றிருந்தாலும் அது காலனிய ஆட்சிவரை தமிழகத்தில் நடைமுறையிலிருந்த பண்ணை அடிமை முறை பற்றிய சுருக்கமான சொற்சித்திரமாகும்.

மரபுவழி அகப்பொருள் கவிதையாக இருந்தாலும் வேறு யாரும் பேசத் துணியாத ஒரு செய்தியினைப் பாரதி ‘கண்ணன் என் தாய்' என்ற தலைப்பில் பேசுகின்றார். “வரலாறு என்பது மதக் கொலைகளாலும் அரசர்களின் கூத்துக்களாலும் ஆனது. வேதங்களிலும் பொய் வேதங்கள் உண்டு. மூத்த தலைமுறையினரும் பொய் நடைக்காரராக இருப்பர்.” இதனைச் சொல்லும் துணிவு பாரதிக்கு முன்னிருந்த கவிஞர்களுக்கு இல்லை என்பதை உணரவேண்டும்.

கோத்தபொய் வேதங்களும் - மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்

மூத்தவர் பொய் நடையும் - சில

மூடர் தம் கவலையு மவள் புனைந்தாள்

என்கிறார் பாரதி.

போலிச் சுவடியை எல்லாம் இன்று

பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

என்று பாரதி கூறும் ஒரு கருத்தினை,

கள்ளப் பொய் நூல்கள்

என்று வைணவத் தத்துவ நூலான ஆசார்ய ஹ்ருதயமும் கூறுகின்றது.

“சொல் புதிது, பொருள் புதிது' என முழங்கும் பாரதியின் முழுமையான புதுமை ஈடுபாடு, அகப்பாட்டிலும் கூட எதிரொலிக்கின்றது.

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

என்கிறார் பாரதி.

இப்படி ஒரு காதலன் தமிழ் அகப்பொருள் மரபில் பேசியதில்லை. வெவ்வேறு மனநிலைகளிலிருந்து பாடப்பட்ட கண்ணன் பாடல்களில் ஓரிடத்தில் (தோழன்) பாரதி தன்னை அர்ச்சுனனாகவும் மற்றோரிடத்தில் தன்னை அர்ச்சுனனின் தம்பியாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்.

ஆண்டு அருள் புரிந்திடுவாள் - அண்ணன்

அர்ச்சுனன் போல் என்னை ஆக்கிடுவாள்

(கண்ண ன் என் தாய்)

'காலத்தால் அழியாத நவகவிதை' எழுதவந்த பாரதி என்ற பெருங்கவிஞன் தமிழ்க் கவிதை மரபிலும், இந்தியக் கவிதை மரபிலும் மிகப்பழமையான ஒரு பாடுபொருளை எடுத்துக் கொண்டு 23 பாடல்களை ஏன் ஆக்கியிருக்க வேண்டும்? காலப் பின்னணியோடும் களப் பின்னணியோடும்தான் இந்தக் கேள்வியை நாம் எதிர்நோக்க வேண்டும்.

வைணவக் குடும்பத்தில் பாரதி பிறக்கவில்லை . எனவே கண்ணன் என்ற பெரும் தெய்வத்தின் மீதான நேயம் அல்லது கவர்ச்சி பாரதிக்குப் பிறப்பிலும் வளர்ப்பிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை. தன் தாய்வழிப் பாட்டனாரைக் கூடச் சிவபூசை செய்பவராகவே பாரதி காட்டுகின்றார். கண்ணன் பாடல்களில் கூட ‘சிவயோகம்' என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. கண்ணன் பாடல்கள் அனைத்தும் 1917 ஆம் ஆண்டு பிறந்தவை என்று சீனி. விசுவநாதனின் ‘பாரதி ஆய்வுப்பதிப்பு' தெரிவிக்கின்றது. அதாவது பாரதியின் புதுச்சேரி வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் இப்பாடல்கள் பிறந்துள்ளன. வைணவ இலக்கிய உலகத்துடன் பாரதிக்குக் கிடைத்த தொடர்பினை மண்டையம் திருமலாச்சாரியாரின் நட்பின் வழியாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. மண்டையம் ஆச்சாரியர் மகள் யதுகிரியம்மாள் தனது தந்தையாரும் பாரதியும் ஆழ்வார்ப் பாடல்கள் குறித்து பேசிக் கொள்வது வழக்கம் என்கிறார். இந்த ஒரு தொடர்பு மட்டுமே 'கண்ணன் பாட்டு' என்னும் பெருங்கலைப் படைப்புக்குக் காரணம் என்று கூற இயலாது.

பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். 'வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும். காந்தி யுகத்தின் தொடக்கம்வரை வாழ்ந்திருந்தாலும் பாரதி அரசியல் தளத்தில் திலகரின் மாணவராகவே இருக்கின்றார். எனவே, 'எல்லாவற்றிலிருந்துமான விடுதலை', என்ற திலகரின் முழக்கம் ஆன்மிகத் தளத்திலும் பாரதியை ஈர்க்கின்றது. 'திலகர் முனி', 'திலகர் கோன்' என்று பாரதியும், ‘குருநாதர்', 'ஆசிரியர் பிரான்' என்று பாரதியின் தோழரான வ.உ.சியும் திலகரைக் கொண்டாடுகின்றனர். திலகர் இந்திய தேசியத்தை ஆன்மிகத் தளத்திலிருந்தும் காண முற்பட்டவர். 'இந்து, இந்தி, இந்தியா' என்ற தனது நூலில் எஸ்.வி. ராஜதுரை இதனை விளக்கமாகப் பேசியுள்ளார். மதம் என்பது ஒரு அதிகாரக் கட்டுமானம். ஆனாலும்கூடத் தமிழ்நாட்டு வைணவம் அந்தப் பொது நெறியிலிருந்து சற்று விலகியே நிற்கின்றது. அரசுப்பிறப்பு, அரசதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது இராமாவதாரம். அன்றும் இன்றும் அரசியல் அதிகார வேட்கையினை உடைய வர்கள் இராமாவதாரத்தினைக் கொண்டாடுவதன் உட்கிடக்கை இதுவேதான். அதனைவிடப் புற அழுக்கு நிறைந்த வாழ்க்கை அசைவுகளையுடைய கிருஷ்ணாவதாரத்தையே வைணவர்கள் கொண்டாடுகின்றனர். “பிரபத்திக்கு தேசநியமமும் காலநியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை ”, என்று கூறி சுத்த அசுத்தக் கோட்பாடுகளை உடைத்தெறியும் ‘ஸ்ரீவசந பூஷணம்', எனும் வைணவத் தத்துவ நூல், திரௌபதி தீட்டுக்கரியவளாக இருந்த காலத்தில் பக்தி செய்த நிகழ்ச்சியையும் இரத்தவாடையும் பிணவாடையும் அடிக்கின்ற போர்க்களத்தில் அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணனால் கீதை சொல்லப்பட்டதையும் உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றது.

அதிகாரச் சார்பு ஏதுமற்ற பாகவதக் கதைகள் காட்டும் கண்ணன் தனது குறும்புகளின் மூலமாக, கற்பிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைச் சவாலுக்கு அழைக்கின்றான். வேறு வகையில் சொல்லுவதனால், 'தெய்வம்' என்ற பெயரில் ஒரு அதிகார மையத்தை பாகவதக் கதைகளைக் கொண்டு உருவாக்க இயலாது. அரசியல் தளத்தில் ஒரு அதிகார மையத்தினை அழித்துச் சனநாயக உணர்வுகள் தலைதூக்க வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். இந்த சனநாயக உணர்வுக்கு அதிகார வலைக்கு உட்படாத பாகவதக் கண்ணன் கதைகள் உணர்வு ரீதியாகத் துணைசெய்கின்றன. பாரதிக்குக் கண்ணன் வாழ்வியலும் கவித்துவமும் நிறைந்த ஒரு தெய்வம். எனவே கண்ணன் பாட்டில் வைணவம் என்ற சமய அதிகார மையம் ஒன்று உருவாகவில்லை . மாறாக ‘மையம் அழித்தல்' என்ற வகையில் சனநாயக உணர்வுகள் பரவலாக்கப்படுகின்றன. எனவேதான் கண்ணனின் குறும்புகளைத் தானும் தன் பங்குக்குப் பாரதி ‘பின்னலைப் பின் நின்று இழுப்பான்' ‘குழல்கேட்டு மயங்கும் வாயில் எறும்பு பிடித்துப்போடுவான்' என்றெல்லாம் மேலும் விரிவுசெய்கின்றார். இந்த அதிகார மையம் அழித்தல்' என்பதே விடுதலை உணர்வின் மறுபக்கமான சனநாயக உணர்வாகும். ஆழ்வார்களின் பாடல் சாரமாக, அதே நேரத்தில் கவித்துவமும் சனநாயக உணர்வும் கொண்ட கவிதைகளாகக் 'கண்ணன் பாட்டு' மலர்ந்திருப்பதற்கு இதுவே காரணமாகும். இதனைத் தாண்டி கண்ணன் பாடல்களின், 'இசைத் தகுதி' ஆழ்வார்களின் பாடல்களைப் போலச் சனநாயக உணர்வுகளைச் சுமந்து வரும் ஊர்தியாகப் பயன்பட்டிருக்கின்றது. இசைவாணர்களே அதனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

Comments