Thursday, 9 December 2021

சடங்கியல் தலைமையும் சமூக அதிகாரமும் Caste System in Tamil Society in Tamil Language

சடங்கியல் தலைமையும் சமூக அதிகாரமும் Caste System in Tamil Society in Tamil Language

தமிழ்ச் சமூகத்தின் சாதியமுறை படிப்பறி வினால் மட்டும் புரிந்துகொள்ளுவதற்கு மிகவும் சிக்கலானது. ஐரோப்பியர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதி முறையை நோக்கிய விதம் இன்னும் சிக்கலானது. ஒரு மேல்சாதி மனிதனைப்போல வியப்புணர்ச்சியோடும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் கேலியாகவும் அவர்கள் சாதித் திரள்களைப் பார்த்தார்கள்; அப்படியே எழுதினார்கள். செர்ரிங் அடிகளார் தொடங்கி எட்கர் தர்ஸ்டன், ஹட்டன் வரையிலான எழுத்துக்கள் எல்லாம் இவ்வாறுதான் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வடமொழியும், சாதியும் சார்ந்தவற்றைப் படித்துவிட்டு இவர்கள், “வருணாசிரமக் கோட்பாடு” (நால் வருணக் கோட்பாடு) எல்லாக் காலத்திலும் எல்லா இடங் களிலும் நடைமுறையில் இருந்ததாக நம்பினார்கள். தமிழகத்தின் தெற்கும் வடக்குமாகப் பயணம் செய்தவர்களுக்குத் தெரியும், 'இது எத்தனைப் பெரிய ஏமாளித்தனம்', என்று. எல்லா இடங்களிலும் பார்ப்பனர்கள் சமூக அதிகாரம் பெற்றிருந்தார்கள் என்பது மட்டுமே உண்மை . இந்த அதிகாரமும் அரசதிகாரம் செல்லுபடியாகாத இடங்களில் இருந்ததில்லை. எனவே தான் தமிழகத்தில் மேற்கு மலை அடிவாரத்தை ஒட்டிய பல பகுதிகளில் மக்கள் தொகை இருந்தும் பார்ப்பனக் குடியிருப்புகள் இல்லை. வருணக் கோட்பாட்டின்படி சூத்திரர்களான வேளாளச் சாதியினர்தான் தமிழகத்தின் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். வட்டாரம் சார்ந்தும் தொழில் சார்ந்தும், உடைமை சார்ந்தும் ஒடுக்கப்பட்ட சாதித் திரள்களே, 'சமூகம்' என்ற பெயரில் வாழ்ந்தன. இந்த வரலாற்று உண்மையை உணராத ஆய்வுகள் அனைத்தும் திசை தடுமாறியவை என்றே கொள்ள வேண்டும்.

தமிழகத்திலிருந்த பார்ப்பனர்களின் வெற்றி என்பது பல்வேறு சாதியினரிடம் வட்டார அளவிலிருந்த சடங்கியல் தலைமையினை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பறித்துக்கொண்டனர் என்பதுதான். இந்தப் பறிமுதல் வேலை அதிகாரமும் உடைமையும் சார்ந்தே அமைந்திருந்தது. எனவேதான் அதிகாரமற்ற மற்ற சாதியாரின் பிறந்த நாள், இறந்த நாள் சடங்குகளிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டனர். அவர்கள் கற்பித்துக்கொண்ட தீட்டுக் கோட்பாடு (Taboo) இதற்கு உறுதுணையாக இருந்தது.

பார்ப்பனர்களிடம் தங்கள் சடங்கியல் தலைமையினைப் பறிகொடுத்த சாதியாரே பிற்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியத் திரள்கள் ஆனார்கள். மருத்துவர் (முடி திருத்துவோர்), பறையர், வள்ளுவர், வண்ணார் (மண்ணார்) என வட்டார வாரியாக இவ்வகையில் பல சாதியாரைக் குறிப்பிடலாம். குறிப்பாக எடுத்துக் காட்டுவதானால், சில சாதியார் பார்ப்பனரைப் போன்று தீ வளர்த்துத் திருமணச் சடங்கினைச் செய்கின்றனர். இந்தத் திருமணச் சடங்கின்போது மணமகனுக்கும் மணமகளுக்கும் பார்ப்பனப் புரோகிதர் காப்புக் கயிறு 'கட்டு'கின்றனர். இந்தக் காப்புக் கயிறு 'அறுக்கும்' சடங்கினைப் பெரும்பாலும் பார்ப்பனப் புரோகிதர் செய்வதில்லை. மாலையில் அல்லது மறுநாளில் மருத்துவர், வண்ணார் போன்ற மற்றொரு சாதிக்காரரே மரியாதையுடன் கூடிய காணிக்கை (தட்சணை) பெற்றுக்கொண்டு மணமக்களுக்குக் கட்டப்பட்ட காப்பினை அறுக்கின்றனர். இது ஒரு சமூக வரலாற்றுத் தொல் எச்சமாகும். அதாவது, திருமணம் செய்துகொண்ட சாதியார்களுக்குக் காப்பறுத்த சாதியாரே பார்ப்பன வருகைக்கு முன் புரோகிதராக (குருவாக அல்லது சடங்கியல் தலைவராக) இருந்திருக்கின்றார். இதுவே வரலாற்று உண்மையாகும்.

சமூக வரலாற்று அசைவுகளில் இதற்கு மற்றுமொரு சான்றினைக்கூடச் சொல்லலாம். ஒடுக்கப்பட்ட மக்களாய்ப் பணி செய்யும் சாதியார் தங்களை ஒடுக்கும் சாதி மக்களின் வீட்டு விழாக்களிலும் கோயில் விழாக்களிலும் ‘சபை மரியாதை' பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, தென் மாவட்டங்களின் இடையர்களில் ஒரு பிரிவினர் பார்ப்பனரைக் கொண்டு தீ வளர்த்துத் திருமணம் செய்கின்றனர். பார்ப்பனக் குருவை ஒட்டிக்கொண்டு சடங்குகளில் அவருக்கு உதவி செய்பவர் மருத்துவர் சாதியைச் சார்ந்தவராவார். மணமகன் தொட்டுக் கொடுக்கும் அரசாணிக் காலை நடுகின்ற உரிமை மருத்துவரான உதவியாளருக்கே உண்டு. பார்ப்பனருக்கு இல்லை. தலையில் தலைப்பாகையோடு மணமேடையினைத் தொட்டுக்கொண்டு அவர் தலைமையில் திருமணம் நடப்பது போன்ற கம்பீரத்துடன் நிற்கிறார். ஒரு காலத்தில் இவரே அவர்களின் சடங்கியல் தலைவராக இருந்திருக்க வேண்டும்.

இது போன்றே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பறையர், வள்ளுவர், வண்ணார் போன்றோர் சடங்கியல் தலைமையினை ஏற்கின்றனர். இது மட்டுமன்றி ஒரே சாதிப் பிரிவிற்குள் அகத்தார், புறத்தார் என்ற வேறுபாடு வரும்போது ஒரே சாதியினைச் சார்ந்தவரே அவர்களுக்குக் குருவாக (புரோகிதராக) இருக்கின்றனர். சமூக அதிகாரம் உருவாக்கிய படிநிலைகளில் ஒன்று 'அகத்தார் - புறத்தார்', என்ற பிரிவுகளாகும். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, புரத வண்ணார் எனத் தவறாக அழைக்கப்படும் 'புறத்து வண்ணார்” ஆவர். இவ்வகையான உள், இடைத்தட்டு சாதிகளைப் பற்றிய கள ஆய்வுகள் பெருக வேண்டும். இவர்களின் சமூக உரிமைகளைப் பார்ப்பனியம் எவ்வாறு பறித்து வைத்துக்கொண்டது என்பதனைக் களஆய்வு செய்து வரலாற்றினைச் சமூகக் கண்ணோட்டத்துடன் மீண்டும் நாம் எழுத வேண்டும். 'எழுதப்பட்ட வரலாற்று நூல்களைத் திருத்தி எழுதவேண்டும்' என அறிஞர் டி.டி. கோசாம்பி இதனையே வலியுறுத்துகின்றார்.


SHARE THIS

Author:

I am writing to express my concern over the Hindi Language. I have iven my views and thoughts about Hindi Language. Hindivyakran.com contains a large number of hindi litracy articles.

0 Comments: