பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பக்தி இலக்கிய ஆய்வுகள் / தமிழ் இலக்கிய வரலாறு சிவத்தம்பி தமிழ் இலக்கியப் பெரும்பரப்பின் பெரும் பகுதியினை இருபதாம் நூற்ற
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பக்தி இலக்கிய ஆய்வுகள் / தமிழ் இலக்கிய வரலாறு சிவத்தம்பி
தமிழ் இலக்கியப் பெரும்பரப்பின் பெரும் பகுதியினை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பக்தி இலக்கியங்களே நிறைத்து வந்துள்ளன. தமிழிலக்கிய ஆய்வாளர் எவரும் புறந்தள்ளிவிட முடியாத பகுதி இதுவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் 'தமிழ் இதழ் உலகம்' என்ற ஒன்று உருவானபோது இலக்கிய ஆய்வுகளுக்கான வித்துக்கள் அங்கங்கே ஊன்றப் பட்டன. தமிழ் உரைநடை கட்டுவிடத் தொடங்கிய அக்காலத்தில்தான் ஆங்கிலேயரின் சமயம் சார்ந்த, சமயம் சாராத உரைநடை நூல்கள் பல வெளிப்பட்டன. சைவ, வைணவப் பழந்தமிழ் இலக்கியங்களும் உரைநூல்களும் பனை ஓலைகளிலிருந்து அச்சு ஊடகத்தை நோக்கி நகர்ந்தன. தமிழ்ச் சிற்றிலக்கிய மரபினைப் பின்பற்றி இசுலாமியர்களின் சிறு சிறு முயற்சிகள் அங்கங்கே வெளிப்பட்டன. ஒருவர் மதம் சார்ந்த இலக்கியங்களை மற்றவர் படிப்பதும் அதனை மறுப்பதுமான கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இது சுபக்கம் x பரபக்கம் என்ற பெயரில், 'தன்மதம் கூறிப் பிறர் மதம் மறுத்தல்' என்னும் சமய மரபுகளின் தொடர்ச்சியாகும். இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. ஈழத்துத் தமிழறிஞர்களின் சைவசமயச் சார்பும் அதற்கு எதிர்வினையான ஈழத்துக் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் எழுத்துக்களுமாகும். இந்த இரு போக்குகளின் பிரதிநிதிகளாக யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரையும் யாழ்ப்பாணத்து சுவாமி ஞானப் பிரகாசரையும் அடையாளம் காட்டலாம். இந்த வகையில் யாழ்ப்பாணம் காசிவாசி செந்திநாதையரை நாவலரின் வழித்தோன்றலாகக் கருதலாம். அவர் ‘தேவாரம் வேதசாரம்', ‘சைவ வேதாந்தம்' என்ற இரண்டு நூல்களை எழுதினார். சைவ பக்தி இலக்கியமான தேவாரத்தை வேதச் சிமிழுக்குள்ளும் வேதாந்தத்திற்குள்ளும் அடைப்பதே அவரது நோக்கமாக இருந்தது. 1916 டிசம்பரில் பிராமணரல்லாதார் அறிக்கை (Non - Brahmin Manifesto) வெளிவந்திராவிட்டால் செந்திநாதையர் ‘வகையறா'விற்கும் இரட்சணிய சேனை (Salvation Army) அமைப் பிற்கும் இடையே நடந்த எழுத்து மோதல் தமிழ்ச் சமூகத்தைப் படுகுழியில் தள்ளியிருக்கும்.
இந்தக் காலப்பகுதியில் நமக்கு ஆறுதலைத் தருகிற நிகழ்வுகளாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று, தான் இளவயதில் காலமாவதற்கு முன்னர் மனோன்மணியம் சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலத்தினைக் கணித்து, ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளை நடத்திய 'சித்தாந்த தீபிகா' என்னும் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையாகும். மற்றொன்று, பாண்டித்துரைத் தேவர் 1904இல் தொடங்கிய ‘செந்தமிழ்' இதழில் இரா. இராகவையங்காரும் மு. இராகவையங்காரும் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளாகும். இந்த இதழில் தமிழ்நாட்டு, ஈழத்து அறிஞர்களின் கட்டுரைகள் பல வெளிவந்தன. என்ன காரணத்தினாலோ 1925க்குப் பின்னர் தமிழ்நாட்டு - ஈழத்து அறிஞர்களின் கருத்தூடாட்டம் நின்று போயிற்று.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் 1960களின் இறுதிப் பகுதியில் தமிழ்நாடு - ஈழ அறிவுலகத் தொடர்பைப் புதுப்பித்த நன்றிக்குரியவர்கள் பேரா. க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோர். இருவரும்தான் ‘ஒன்றையே நோக்கிப் புக்கான்' என்பதற்கு மாறாகச் சங்க இலக்கியம் தொடங்கிப் புதுமைப்பித்தன் வரையிலான தமிழிலக்கியப் பரப்பில் தங்கள் ஆய்வு முயற்சிகளை உண்மையோடும் நேர்மையோடும் செய்திருக்கின்றனர். இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தமிழ் ஆய்வுலகிற்குப் புதிய வெளிச்சம் தந்தவர்கள் இவர்கள் ஆவர்.
தமிழ்ப் பக்தி இலக்கிய ஆய்வுகளிலும் இந்த இரண்டு அறிஞர்களும் முன்னடி எடுத்து வைத்தனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகச் சமய இதழ்கள் பல தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. ஆனாலும் தம் சமய சித்தாந்தத்தை ஆய்வுக்குட்படுத்தும் ஒரு நெறி தமிழ்நாட்டில் முளைவிடவில்லை. உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்த நிலை மிக அண்மைக் காலமாகத்தான் தொடங்கியுள்ளது. எனவே,
தமிழகப் பல்கலைக்கழங்களில் தமிழ் வரலாற்றில் மதம் (அல்லது மதங்கள்) வகித்துவந்த இடம் பற்றிய ஆய்வுகள் அதிகம் இடம்பெறவில்லை . பேராசிரியர் நா. வானமாமலை, க. கைலாசபதி போன்றவர்கள் (இந்நூலாசிரியர் உட்பட) சில சமூக மத ஆய்வுகளைச் செய்திருந்தனர்'
என்று தன்னையும் உட்படுத்திப் பேராசிரியர் கா. சிவத்தம்பி வருந்திக்கூறுவது உண்மையேயாகும். தங்கள் சமயம் குறித்தோ பிற சமயம் குறித்தோ பலர் எழுதிய எழுத்துக்களும் ‘விளக்கக் கட்டுரை' என்ற எல்லையினைத் தாண்டி வராமலே போய்விட்டன.
எனவே மார்க்ஸீயச் சார்புடையவர்கள் என்று அறியப்பட்ட மேற்குறித்த பேராசிரியர் மூவருமே இந்தத் துறையில் முதலானவர்களாகக் கால் பதித்தனர். இந்த இடத்தில் மரபுவழித் தமிழ்ப் புலமை மற்றுமொரு கேள்வியினை முன்னெடுத்தது. 'தெய்வ நம்பிக்கையில்லாத மார்க்ஸீயவாதிகள் எந்த வகையில் மதம்சார்ந்த பக்தி இலக்கிய ஆய்வுகளை முன்னெடுத்தனர்' என்பதே அது. பேராசிரியர் சிவத்தம்பி அதற்கான விடையினையும் முன்வைக்கிறார்.
நம்மிற் பலர் நினைப்பது போன்று மார்க்ஸியம் மதத்தை முற்றாக நிராகரிக்கவில்லை. மார்க்ஸியம் மதத்துக்கான (மெய்யியல்) எடுகோள்களை நிராகரிக்கின்றது. ஆனால் ‘மதம்' என்பது ஒரு முக்கியச் சமூக நிறுவனம் என்பதை மார்க்ஸோ , ஏங்கல்ஸோ நிராகரிக்கவில்லை ..
சமயஇலக்கிய ஆய்வுகளைப் பொருத்தமட்டில் அவை தமிழ்நாட்டில் வளரவில்லையென்பது ஒரு வருந்தத்தகுந்த செய்தியே ஆனாலும் அதற்குரிய காரணங்களை நாம் கணித்தறிய வேண்டும். பகுத்தறிவு இயக்கத்தின் எழுச்சி அதற்கான ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க இயலாது. பேராசிரியர் அவர்களும் இக் காரணத்தைப் பதிவு செய்துள்ளார். அத்துடன், திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மாத்திரமல் லாமல் மார்க்ஸிய இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கூட இந்நிலையினராகவிருந்தனர் என்பதற்கு உதாரணங்கள்
உண்டு '
என்றும் எழுதிச் செல்கிறார்.
பேராசிரியர் இவ்வாறு எழுதிய பின்னருங்கூட கோ. கேசவன், பொ. வேல்சாமி போன்ற ஒன்றிருவர் மட்டுமே இந்தத் துறைக்கு வந்துள்ளனர். பக்தி இலக்கியங்களை - அவை எந்த மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவற்றை - இசைப்பாடல்களாக மட்டுமே தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவை வழிபாட்டு உணர்வுடன் பாடவும் கேட்கவும் மட்டுமே பிறந்தவை என்பது அவர்களுடைய நினைப்பாகும். எனவே அவை இலக்கியமாகக் கருதப்பட்டு காலப்பின்னணியிலும் களப் பின்னணியிலும் ஆராயப்பட வேண்டியன என்ற உணர்வின்மையே ஆய்வுக்குத் தடையாகப் போய்விட்டது. பகுத்தறிவு இயக்கம் சற்றுத் தளர்ந்தபின்னரும்கூட இந்த உணர்வு தலையெடுக்கவில்லை என்பதற்கு இதுவும் காரணமாகும்.
எல்லாச் சமயங்களும் தமிழ்மொழியைக் கொண்டாடுகின்ற போக்கினைச் சுட்டிக்காட்டுகின்ற பேராசிரியர் இதன் வழியாக,
தமிழ்ப் பண்பாடு எனும் மொழிவழிக் கோட்பாடு தோன்றுவதற்கு (Language of Culture Concept ஏற்படுவதற்கு) காரணமாக இதுவே அமைந்தது'
என்று சரியாகவே தன் பார்வையினை முன்நிறுத்துகின்றார்.
பேராசிரியருக்கு மட்டுமன்று, தமிழ்ப் பக்தி இயக்க ஆய்வாளர்கள் அனைவருக்கும் முன்னிற்கும் மிகப்பெரிய தடை ஒன்றுண்டு. அதாவது, 1925 - 1965 காலத்தில் தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கும் ஈழத்து ஆய்வாளர்களுக்கும் மிகச்சிறிய தூர இடைவெளியே இருந்தாலும் ஆய்வுலக உறவுகள் ஏதும் நிகழவே இல்லை . அதற்கு அடிப்படையான சமய ஊடாட்டங்களும் நிகழவில்லை. யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சைவம் கத்தோலிக்கத்தை எதிர்கொண்ட முறை வேறு. தமிழ்நாட்டுக் கிறித்தவம், சைவத்தோடு கொண்ட உறவு நிலை வேறு. ஈழத்துக் கத்தோலிக்கர்கள் வீரமாமுனிவரின் ‘பெரிய நாயகி' என்னும் பேரிலமைந்த கன்னிமேரித் தெய்வத்தைத் தமிழ்நாட்டுச் சூழலில் உணரவில்லை. வைணவம் என்னும் மதம் குறித்து ஈழத்து ஆய்வாளர்களுக்குப் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போயிற்று. ஈழத்தில் தமிழ்நாட்டு வைணவத்திற்கு வேர் எதுவும் இல்லை. எனவே ஆழ்வார்களின் பாசுரங்களும் அவற்றிற்கான உரை விளக்கங்களும் மணிப்பிரவாள நடையில் அமைந்த தத்துவ நூல்களும் அவற்றின் ‘நிகழ்காலச்' சடங்கியல் வாழ்வும் தமிழக எல்லையைத் தாண்டி வடக்கு நோக்கிப் பாய்ந்த பின்னரும்கூட (கிருஷ்ணதேவராயரின் 'ஆமுக்த மால்யதா' ஆண்டாளைப் பாடும் தெலுங்கு நூலாகும்) ஈழத்தைச் சென்றடையவில்லை.
வைணவத்தின் தமிழிலக்கியப் பாரம்பரியத்தை, அவ்விலக்கியப் பாரம்பரியத்தின் சமூகத்தளத்தை ஆயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஆய்வுக் கட்டுரையாக வடிப்பதற்கான தயார் நிலை இன்னும் ஏற்படவில்லை'
என்கிறார் பேராசிரியர்.
பேராசிரியரின் தயக்கத்தை நியாயப்படுத்தும் ஒரு சான்றினை இந்த இடத்தில் எடுத்துக்காட்டலாம். 'திருவாசகம் காட்டும் மணிவாசகர்' என்னும் கட்டுரையில், "திருவாசகப் பாடல்களில் உணர்ச்சி வெளிப்பாடு இரு வகைப்பட்டு நிற்பதைக் காணலாம்.
அ. கற்பித உணர்ச்சி நிலையிற் பாடப் பெற்றவை
ஆ. தன்மை நிலையிற் பாடப் பெற்றவை
கற்பித உணர்ச்சி நிலை அகத்துறையில் வரும் உணர்வு நிலைகளாம்'
என்று வகைப்படுத்துகிறார் பேராசிரியர். இந்த வகைப்பாடு சரியானதே.
பக்திப்பாடலை ஆக்கும் கவிஞன் எப்பொழுது தானாக நின்று பாடுகின்றான். எப்பொழுது பெண்ணாக (அன்புக்கும் ஏங்கும் காதலியாக தாயாக) மாறிப்பாடுகின்றான் என்பது ஒரு அடிப்படையான கேள்வியாகும். நம்மாழ்வாரின் அகத்துறைப் பாசுரங்களை முன்னிறுத்திக் கொண்ட 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வைணவ உரையாசிரியர் இந்தக் கேள்விக்கான விடையினை நமக்குத் தருகின்றார். அழகியமணவாளப் பெருமாள் நாயனார் என்ற வைணவ ஆசாரியர் 'ஆசார்ய ஹ்ருதயம்' (மாறன் மனம்) என்ற தன்னுடைய, மணிப்பிரவாள நடையில் அமைந்த தத்துவநூலில்,
ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு' என்று பகுத்துக் காட்டுகின்றார்.
அறிவு தலையெடுக்கும்போது கவிஞனின் பேச்சு ஆண் பேச்சாகவும், அன்பு பெருக்கெடுக்கும்போது பெண்பேச்சாகவும் அமைகின்றது என்பது எளிமையும் ஆழமும் சேர்ந்த விளக்கமாகும்.
வைணவத்தைக் குறித்துத் தயக்கத்தோடு பேசினாலும் தெளிவான முடிவாகப் பேராசிரியர் “சித்தாந்தக் கொள்கைக்கு ஆதாரமாக அமைகின்ற சைவமரபினை நோக்கும்பொழுது, அதில் இராமானுசர் நிலைநிறுத்திய அளவு சமூக நெகிழ்ச்சி காணப்படவில்லையெனினும், பிராமணியம் வற்புறுத்தும் வருணாசிரம தருமம் இறுக்கத்துடன் போற்றப்படவில்லை என்பது உண்மை ” என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்ப் பண்பாட்டிற் கிறித்துவம் (ம.க. கட்டுரை), தமிழிற் கிறித்தவ இலக்கியப் பாரம்பரியம் (ம.மானு கட்டுரை எண். 2) என்ற இரு கட்டுரைகளும் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பேராசிரியர் தந்துள்ள பெரிய பங்களிப்பாகும். தமிழ்க் கிறித்துவ இலக்கிய ஆய்விற்கு இதனை அடிப்படையாகக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் அம்மானை, வழிநடைச் சிந்து, கண்ணி, கும்மி, கீர்த்தனை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் படைத்தளித்த நூற்றுக்கணக்கான இலக்கியங்களைக் காணவும் பேணவும் ஆராயவும் இந்த இரு கட்டுரைகளும் உந்துசக்தியாகும். இசுலாமியத் தமிழிலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் மிக அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் ஊக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன. இசுலாமியத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடக்க காலத்தில் நாட்டார் மரபுகளோடு உறவு கொண்டிருப்பதனைப் பேராசிரியர் மிக நுட்பமாகத் தன் கட்டுரையில் எடுத்துக் காட்டுகின்றார்.
கிறித்தவம், இசுலாம் பற்றிய பேராசிரியரின் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் மிகமிக அடிப்படைத் தேவையாகின்றன. ஏனென்றால் இவ்விரண்டு மதங்கள் குறித்த ஊடகப் பெருஞ் சொல்லாடல்களுக்கு இவை மாற்றாகவும் மருந்தாகவும் அமைகின்றன.
பேராசிரியரின் சமய இலக்கிய ஆய்வுகள் இன்றளவும் தமிழ்ச் சூழலில் இவ்வகை ஆய்வுகளின் போதாமையினையும் அவற்றின் தேவையினையும் நமக்கு உணர்த்துகின்றன. இவற்றோடு சைவ, பக்தி இயக்கம் குறித்த பல நுட்பமான கேள்விகளைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
அருணகிரியாரின் பாடல்களில் காணப்படும் மிதமிஞ்சிய பாலியல் திளைப்பு
எனும் அமிசமும் அவரை விளங்கிக் கொள்வதற்கு முக்கியமான ஒன்றாகும்'
என்கிறார் பேராசிரியர். இசுலாமியப் படையெடுப்பினால் மிகச் சில காலம் கோயில்கள் நெருக்கடிக்கு உள்ளாயின. மூத்துப் போன தந்தைத் தெய்வத்தை விட்டுவிட்டு இளமையும் காதலும் வீரமும் நிறைந்த மகன் (முருகன்) தெய்வத்தை அன்றையச் சமூக உளவியல் விரும்பி நின்றதே காரணமாகும். இதனை மேலோட்டமாக, ஆனால் நுட்பமாகப் பதிவு செய்கிறார் பேராசிரியர்.
இவ்வகையான விளக்கங்களோடும் நமக்கு நிறையக் கேள்விகள் எஞ்சுகின்றன. திருமந்திரம் சாத்திர நூலா தோத்திர நூலா? தேவாரப் பாடல்களுக்கும் திருவாசகப் பாடல்களுக்கும் ஆன சிந்தனைத்தளம் ஒன்றுதானா? தேவாரம் கட்ட விரும்பிய சைவமும் மெய்கண்டாரின் சித்தாந்தசைவமும் ஒரே அடிப்படையில் அமைந்தவைதாமா? வாலை, மனோன்மணி, பராபரை, சக்தி ஆகிய திருமந்திரச் சொல்லாடல்களை மட்டும் கலகமரபுச் சித்தர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டனர் என்பனவெல்லாம் அவற்றில் சில.
பேராசிரியர் எழுதுவதற்கு முன்னரும் ஏன், பின்னரும்கூடப் பக்தி இலக்கிய ஆய்வுகள் மிகமிகக் குறைவே. ஒரு மிகப்பெரிய ஆடுகளம் ஆடுவாரின்றி வெற்றிடமாகக் கிடப்பதைப் பேராசிரியர் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். இந்தச் சுட்டிக்காட்டலும் வழிகாட்டலுமே அவரது சமய ஆய்வுக் கட்டுரைகளின் பெரும் பங்களிப்பாகும்.
குறிப்புகள்
- கா. சிவத்தம்பி, (மூன்றாம் பதிப்பு) முன்னுரை, தமிழிலக் கியத்தில் மதமும் மானுடமும், ப.14.
- மேலது., ப.17.
- கா.சி., இலக்கியமாகப் பக்திப் பாடல்கள்’ மதமும் கவிதையும் (மக்கள் வெளியீடு), ப.90.
- கா.சி., ‘தமிழ்ப் பண்பாட்டிற் கிறிஸ்தவம்' மதமும் கவிதையும், ப.67.
- கா.சி., (முதற் பதிப்பு) முன்னுரை, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், ப.35.
- கா.சி., திருவாசகம் காட்டும் மணிவாசகர், மதமும் கவிதையும், ப.54
- கா.சி., ‘சைவசித்தாந்தம் - ஒரு சமூக வரலாற்று நோக்கு, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், ப.115.
- கா.சி., ‘தமிழின் இரண்டாவது பக்தியுகம்' மதமும் கவிதையும், ப.39.
COMMENTS