பழையனூர் நீலியின் கதை : In this article Read the full story of Pazhayannur Neeli Temple in Tamil Language. பழையனூர் நீலி கதை
பழையனூர் நீலி கதை - Pazhayannur Neeli Temple in Tamil
தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் ஒருதலைச் சார்பான கருத்து நிலையினையே பெரும்பாலும் காட்டியிருக்கின்றன. அவற்றின் தொகுப்பு முறையும் அவ்வாறுதான் அமைந்துள்ளது. விதிவிலக்காகவே சில வரலாற்று நிகழ்வுகளும் துணுக்குகளும் தமிழ் இலக்கியங்களில் அங்கங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று பழையனூர் நீலி கதை.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் இக்கதையினை மெலிதாகத் தம் தேவாரத் தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
வஞ்சப் படுத்தொருத்தி வாணாள்கொள்ளும்
வகைகேட்டு)
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே
(திருவாலங்காட்டுப் பதிகம்)
பழையனூர் நீலி கதை குறித்த முதல் எழுத்துப் பதிவு இதுவேயாகும். நீலி கதைக்குச் சில பாட வேறுபாடுகள் இருப்பினும் கதையின் சுருக்கம் இதுவே: காஞ்சிபுரத்து வணிகன் ஒருவன் தன்னுடைய முதல் மனைவியை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்த அவன், வணிக நோக்கமாகப் பழையனூர் வழியாகப் பயணம் செய்கிறான். பழையனூர் என்பது திருவாலங்காட்டை அடுத்த ஊராகும். கொலை செய்யப்பட்ட அவன் முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடிக்கிறாள். அவனுடைய மனைவி போல் உருமாற்றம் பெற்று, ஒரு கரிக்கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கணவனை வழிமறிக்கிறாள். அவன் அவளை மனைவியென ஏற்றுக்கொள்ள மறுக்கவே வழக்கு திருவாலங்காட்டு வேளாளர்கள் முன் வருகிறது. நீலி ஆறாகக் கண்ணீர் வடிக்கிறாள். வணிகனோ, ‘இது வஞ்சப் பேய்' என்று கூறி மறுக்கிறான். நீலியின் கையிலுள்ள குழந்தையோ வணிகனை 'அப்பா' என்று அழைக்கின்றது. செய்வதறியாது திகைத்த வேளாளர்கள் நீலியின் அழுகைப் பெருக்கைக் கண்டும் குழந்தை அழைத்ததைக் கொண்டும் அவள் வணிகனின் மனைவியே என்று முடிவுசெய்துவிடுகிறார்கள். வணிகனோ இந்தப் பேய் தன்னைக் கொன்றுவிடும் என்று கூறி விடாப்பிடியாக மறுக்கிறான். தீர்ப்பளித்த வேளாளர்களோ 'இவளோடு ஒரு வீட்டில் நீ தங்கு. நீலி பேயாகி உன்னைக் கொன்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளித்து மாள்கிறோம்' என வணிகனுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். அன்று இரவு அவர்கள் தங்கியிருந்த இடத்தில் நீலிப்பேய் வணிகனைக் கொன்றுவிட்டுக் காணாமல் போய்விடுகிறது. காலையில் வணிகன் மாண்டுகிடப்பதைக் கண்ட வேளாளர்கள் தாங்கள் சொன்ன சொல் தவறாமல் தங்களின் தவறான தீர்ப்புக்காகக் குழிவெட்டித் தீமூட்டி அதிலே பாய்ந்து உயிர் நீத்தனர்.
நாட்டார் மரபில் நீலியின் கதைவடிவம் மறந்து போய் விட்டாலும் அழுகையும் பொய்யுமான பெண்ணின் கண்ணீருக்கு, 'நீலிக் கண்ணீர்' என்ற தொடர் மட்டும் பெண்களிடத்தில் இன்றளவும் வழங்கி வருகிறது. பொய்யான கண்ணீரின் அளவை நம்ப மறுத்து ‘நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே' என்ற சொல்லடையும் பெண்களிடத்தில் வழங்கி வருகின்றது.
எழுத்து மரபில் நீலியின் கதை விரிவாகப் பேசப்பட்டது. உமாபதி சிவாச்சாரியாரின் சேக்கிழார் புராணத்தில்தான்:
மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகனுயிர் இழப்பத் தாங்கள்
கூறிய சொல் பிழையாது துணிந்து செந்தீக்
குழியில் எழுபதுபேரும் முழுகிக் கங்கை
ஆறணி செஞ்சடைதிருவா லங் காட்டப்பர்
அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ் மெய்ப்
பேறு பெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரித்தள விட்டிவள வெனப் பேச லாமோ
என்பது சேக்கிழார் புராணப் பாடலாகும்.
பாடலின் நான்காமடி வேளாளரின் குலப் பெருமை பேசுவதை வெளிப்படையாகவே உணர்த்தி நிற்கிறது.
வேளாளர்கள் எழுபது பேரும் தீப்புகுந்த குழியில் தீ நெடுங்காலம் அவியாமல் எரிந்து கொண்டிருந்ததாம். இந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட மூவேந்தர்கள் நேரில் வந்து இந்தக் காட்சியினைக் கண்டு வியந்து, ஆளுக்கொரு பாடலாக மூன்று பாடல்களில் வேளாளர்களின் சொல் தவறாத் தன்மையினைப் புகழ்ந்து பாடுகிறார்கள். இந்த மூன்று பாடல்களையும் தமிழ் நாவலர் சரிதையிலிருந்து எடுத்து மு. இராகவையங்கார் தம்முடைய ‘பெருந்தொகை'யில் காட்டுகிறார்.
வேளாளர் பெருமை பேசும் எல்லாச் சிற்றிலக்கியங்களிலும் நீலிக்கதையினை முன்னிறுத்தி வேளாளர்களின் சொல் தவறாத் தன்மை பேசப்படுகிறது.
பக்தி இயக்க எழுச்சியின்போது சைவ, வைணவ மதங்களால் அதற்கு முந்திய கட்டத் தொன்மங்களும் நாட்டார் கதைகளும் சமண பௌத்தக் கதைகளில் சிலவும் தன்மயமாக்கப்பட்டன. பக்தி இயக்கத்தின் அடிக்கூறுகளில் முதன்மையான ஒன்று, வணிகருக்கும் வேளாளர்களுக்குமான முரண்பாடாகும். பக்தி இயக்கத்திற்கு முந்திய பெருங்காப்பியங்களிலும் சிறு காப்பியங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் வணிகரது பெருமை தவறாது பேசப்படுகின்றது. சமண, பௌத்த மதங்களின் பரவலும் வாழ்க்கையும் பெரும்பாலும் வணிகக் குழுக்களைச் சார்ந்தவையாகவே இருந்தன. பக்தி இயக்கமோ நிலவுடைமையாளர்களின் எழுச்சியாக இருந்தது. எனவே வணிகர் x வேளாளர் என்ற எதிர்வு, மறைமுகமாகத் தமிழ் எழுத்திலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலிக் கதையில் கொலைகார வணிகனும் சத்தியம் தவறாத வேளாளர்களும் எதிர்வுகளாக முன்வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு தரப்பிலும் 'ஆணுக்கடங்கிய பெண்' என்ற பார்வை பொதிந்து கிடப்பதையும் நம்மால் உணர முடிகிறது.
பெண்கல்விக்கு இடமளித்த மதம் சமணம் என்றாலும் பெண்ணுக்குக் 'குறைந்த உயிர்' என்ற தகுதியினையே சமண மதம்கொடுத்தது. அதற்கு எதிராகச் சைவமதம் கடவுளுக்கு ஆண்பாதி, பெண் பாதியான ‘அர்த்தநாரீஸ்வரர்' கோலத்தைக் கற்பித்தது. இந்தக் கற்பிதம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் சமுதாய வரலாற்றுத் தேவையாகும். சோழப் பேரரசின் எழுச்சியும் சைவமும் சமணத்தை எதிர்த்தபோதும் அதன் வழியிலேயே ஆணாதிக்கச் சிந்தனைக்குள் புகுந்துகொண்டன என்பதே வரலாறாகும்.
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள். ஆனால் தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பான நிகழ்வாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள். அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன. எனவேதான் கொலைகாரக் கணவனைப் பழி வாங்கிய நீலி தெய்வமாக்கப்படவில்லை; அதே சமயம் அவள் மறக்கப்படவுமில்லை. இந்த இரண்டுக்குமான இடைவெளி நினைக்கப்பட வேண்டிய ஒன்று.
பிற்காலத்தில் ‘பழகை நல்லூர் நீலி' என்னும் பெயரில் தென் மாவட்டங்களில் இசக்கியம்மனோடு அவள் சேர்க்கப்பட்டாள். இச்சேர்க்கை, வில்லுப்பாட்டுப் பாடகர் அளவில் நடந்ததே தவிர வழிபாட்டு அளவில் நடைபெறவில்லை. ஆனாலும் இந்தச் சேர்க்கைக்கான காரணம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இசக்கியம்மன் கதையின் மூலவடிவமான 'அம்பிகாயட்சி' என்ற சமணக் கதையில் அவள் இரண்டு குழந்தைகளோடு கணவனால் கைவிடப்பட்ட பெண் ஆவாள். நாட்டார் மரபில் அவள் உக்கிரம் மிகுந்த 'வாழாவெட்டிப் பெண்ணாவாள். கணவனால் கைவிடப்பட்ட உக்கிரம்கொண்ட பெண் என்ற அளவில் நீலியினை இசக்கியம்மனோடு சேர்த்துப் பார்ப்பது கதைப்பாடல் பாடகர்களுக்கு எளிதாகப் போய்விட்டது.
0 comments: