Essay on the Role of Tamil Nadu in the Indian Freedom Struggle : இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு / இந்திய சுதந்திர போராட்டத்தில் த
Essay on the Role of Tamil Nadu in the Indian Freedom Struggle : இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு / இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கட்டுரை / இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு கட்டுரை
இந்தியத் தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு / இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கட்டுரை
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதலாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் தமிழ்நாட்டின் தென்கோடிப் பகுதி வரை எவ்விதப் பேரெதிர்ப்புமின்றி ஊடுருவிச் சென்றன. எனவே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழத் தமிழ்நாடு முழுவதும் அப்படைகளின் கையில் வந்துவிட்டது. 1752இல் தொடங்கி 1799க்குள் அவர்கள் தமிழ்நாட்டின் நிலவரி வசூலை முழுவதுமாகத் தமதாக்கிக் கொண்டனர். இதன் இறுதிக்கட்டமாகத் தென்தமிழ்நாட்டின் 1799இல் வீரபாண்டியக் கட்டபொம்மனும் 1801இல் மருது சகோதரர்களும் தூக்கிலிடப்பட்டனர். இதன் பின்னர் நீதித்துறையும் இராணுவமும் சார்ந்த ஒரு முழுமையான அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் காலனி அரசாங்கம் ஈடுபட்டது.
வங்காளம் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதியில் அரசாங்கத்தை உருவாக்கிய முன் அனுபவம் காலனி அரசுக்கு இருந்தது. வங்காளத்தில் நீதித் துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர். வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார். உள் நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் (Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய 'இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது. அப்போதுதான் தமிழ்நாட்டில் 1801இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்ட பெரியமருது தன்னுடைய மரண வாக்குமூலத்தில் கம்பெனி அதிகாரிகளுக்கு வைத்த கோரிக்கைகளில் ஒன்று; 'நான் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் வழங்கிய சொத்துக்களைக் கம்பெனியார் பறிக்கக்கூடாது', என்பதுதான் அது. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்று கொண் டிருந்த கம்பெனி அரசு இந்தக் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டது. அத்துடன் உள் நாட்டு மக்களின் மத உணர்வுகளைச் சீண்டிவிடக்கூடாது என்பதில் அது முன் னெச்சரிக்கை உணர்வுடன் 1817 வரை நடந்துகொண்டது. இந்தக் காலப்பகுதியினை அரசு ஆவணங்கள் ‘நடுநிலைக் காலம்' (Period of Nutrality) என்று குறிப்பிடுகின்றன. இக்காலத்தில் கம்பெனி அரசாங்கம் கோயில் நிலங்களுக்குரிய வரியினை மட்டும் பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், கோயில் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் வருவாய் ஆணையத்தின் (Board of Revenue) ஆணையைப் பெற்றே நடவடிக்கை எடுத்தனர்.
வட இந்தியாவிலும் பார்க்கத் தமிழ்நாட்டில் பெருங் கோயில்களும் மடங்களும் எண்ணிக்கையில் மிகுதி. விளைநிலங்களில் 90% இவற்றுக்கு உரியதாகவே இருந்தன. இக்கோயில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கிவந்தன. (விதி விலக்காகச் சில மடங்களும் விளைநிலங்களும் வேளாளர் கையில் இருந்தன.) சொத்துடைமை நிறுவனமான கோயில் வழியாகப் பார்ப்பனர்கள் பெருந்திரளான மக்களின்மீது தங்களின் அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது. கோயிற்பணியாளர் வரிசையிலும் இசைகாரர், கொத்தர், தச்சர் தவிர அருச்சகர், பரிசாரகர், மடைப்பள்ளியார், ஸ்தலத்தார் என்று பார்ப்பனர்களே எண்ணிக்கையிலும் மிகுதியாக இருந்தனர். எனவே அரசு என்னும் நிறுவனத்துடன் தொடர்புகொள்ளப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. பெருந்திரளான மக்களின் கையில் இருந்த ஒரே நிறுவனம் ‘உள்ளூர்ச் சாதிக்குழு' (Local Caste Assembly) மட்டுமே. சொத்துடைமையற்ற இந்தக் குழுக்களுக்கு வேறு வலிமை ஏதும் இல்லை. இவை வட்டார அளவில் சடங்குகளால் பிணைக்கப்பட்டவை மட்டுமே. இந்தப் பின்னணியில்தான் 1817இல் காலனிய அரசு கோயில்களையும் மடங்களையும் ஒழுங்குபடுத்தும் (Regulations Vilof 1817) சட்டத்தைக் கொண்டு வந்தது.
1830களில்தான் பத்திரிகைகள், புதுக்கல்விப் பள்ளிகள் என்னும் புதிய சமூக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அறிமுகமாயின. அதற்கு முன்னர் ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் முயற்சியில் சிறிய அளவிலான கல்வி முயற்சிகளைச் செய்திருந்தனர். சென்னையை அடுத்து தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கணிசமான அளவு கிறித்தவத்தைத் தழுவியிருந்தனர். எனவே, மேல்சாதியினரின் நடுவில் அரசதிகாரம் பிற மதத்தினரின் கையில் இருப்பது ஓரளவு உணரப்பட்டது. மறுதலையாக சில மிஷனரிகள் முயற்சியால், கிறித்துவர்களாக மாறிய தாழ்த்தப்பட்ட மக்களைப் பழைய வழக்கப்படி ஊர்க்கோயில் திருவிழாக்களில் ஊழியம் செய்ய மேல்சாதியார் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அரசு ஒரு ஆணை வெளியிட்டது. இதனைப் பொறுக்கவியலாத மேல்சாதியார், அரசு தங்கள் மத வழக்கங்களில் தலையிடுவதாகக் குற்றஞ் சாட்டினர். காலனி ஆட்சிக்கான தங்கள் முதல் எதிர்ப்பை மேல்சாதியார் இவ்வாறு சாதி சார்ந்தும் மதம் சார்ந்துமே பதிவு செய்தனர். ஏனென்றால் மரபு வழிச் சமூகத்தில் சாதியும் மதமும் (குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு) நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் பிரிக்க முடியாதபடி அமைந்திருந்தன. 1834இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னோடியாகத் தொடங்கிய சென்னை உயர்நிலைப் பள்ளியில் 1855 வரை தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு அனுமதி இல்லை. 1851இல் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதித்ததால் பல்கலைக்கழக மேலாண்மைக் குழுவிலிருந்து ஒரு 'இந்து' உறுப்பினர் பதவி விலகினார். 1855 வரை இந்தப் பள்ளியிலிருந்து தகுதி காண் பட்டயம் (Proficiency Degree) பெற்ற 36 பேரில் 20 பேர் பார்ப்பனர்களே என்றும் 1859இல் ஆங்கிலேய அரசு முதன்முறையாகத் தேர்ந்தெடுத்த துணை ஆட்சியர் (Deputy Collector) 40 பேரில் இந்தப் பள்ளியில் பயின்ற பார்ப்பனர்களே பெருந்தொகையினர் என்றும் ஆர். சுந்தரலிங்கம் எடுத்துக்காட்டுகிறார்.
மேற்குறித்த நிகழ்வுகளில் இருந்து நாம் பெறக்கூடிய செய்தி ஒன்றுண்டு; அதுவரை பார்ப்பனர்கள் மட்டுமே பெற்றுவந்த வேதக் கல்வியும் வடமொழிக் கல்வியும் தம் அதிகாரத் தகுதியை இழந்துவிட்டன. சமூக அதிகாரம் சார்ந்த கல்வி என்பது ஆங்கிலக் கல்வியாக மாறிவிட்டது. அது பொதுக் கல்வியாக இருந்தபோதும் மக்கள் திரளில் சிறுபான்மையினராக இருந்த பார்ப்பனர்கள் புதிய அதிகாரத்தைத் தேடி ஆங்கிலக் கல்விக்குள் முதலில் நுழைந்துகொண்டனர்.
தமிழ்நாட்டு மக்களின் அமைப்புரீதியான முதல் அசைவுக்கு 1852இல் தொடங்கப்பெற்ற சென்னை குடிமக்கள் சங்கத்தினை (Madras Native Association) அடையாளமாகக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டில் தேசிய, திராவிட இயக்கங்களின் முன்னோடி அமைப்பாக இதனையே கொள்ளவேண்டும். இந்த அமைப்பு பெரும்பாலும் பார்ப்பனரல்லாத உயர்சாதியான செட்டிகள், கோமுட்டிச் செட்டிகள், நாயுடு ஆகியோரைக் கொண்டு கஜலு லெட்சுமி நரசுசெட்டியாரால் தொடங்கப்பெற்றதாகும். இந்த அமைப்பில் திருநெல்வேலி கிறித்துவ வேளாளரான அப்பாசாமிப்பிள்ளை போன்றோரும் பங்குபெற்றுள்ளனர். கிரசன்ட் (Crescent) என்ற இதழ் இந்த அமைப்பின் சார்பில் வெளிவந்தது. சமூக சீர்திருத்தத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பிலிருந்து 1853இல் வெளியேறிய சீனிவாசப்பிள்ளை என்பவர் Hindu Progressive Development Society (இந்து முன்னேற்ற வளர்ச்சி சங்கம்) என்ற அமைப்பினைத் தொடங்கினார். இந்த அமைப்பினர் Rising Sun (உதய சூரியன்) என்ற ஆங்கில இதழை வெங்கட்ராய நாயுடு என்பவரை ஆசிரியராகக் கொண்டு பத்தாண்டுக்காலம் (1853 - 1863) நடத்தினர்.
தேசம், தேசியம், இந்து, இந்திய நாகரிகம், திராவிடம் முதலிய கருத்தாக்கங்கள் அக்காலத்தில் முழுமையாக உருப்பெறவில்லை. 1866இல் வங்கத்தைச் சேர்ந்த கேசவந்திரசென் பிரம்மசமாசத்தின் பிரதிநிதியாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கின்றார். ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனர்கள் அவரால் மீட்கப்படுகின்றனர். பிரம்மசமாஜத்தின் கருத்துக்கள் மொழி எல்லைகளைத் தாண்டி இந்திய ஆன்மிகத்தை உருவாக்கும் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். பார்ப்பன, பௌராணிக மரபுகளால் கொண்டாடப்பட்ட 'பரத கண்டத்தின்' உயிர்ப்பை அது மீட்டெடுக்கும் என அவர்கள் நம்பினர். இந்தக் காலக்கட்டம் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட மக்கள் திரள் இதற்கு வெளியில் தங்கள் சாதி அடையாளத்தைத் தொடத் தொடங்கினர். இதனைச் சாதியப் பத்திரிக்கைகளின் தொடக்கக் காலம் எனலாம்.
மொழி எல்லைகளைக் கடந்த தேசியம் என்ற கருத்தாக்கம் பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் 1880இல் பி. சிவசாமி ஐயரும், அனந்தாச்சார்லு என்பவரும் சேர்ந்து 'மெட்ராஸ் மகா ஜன சபா' என்ற அமைப்பினைத் தொடங்கினர் இதுவே தமிழ் நாட்டில் இந்திய தேசியம் பேசிய முதல் அமைப்பாகும். இந்த அமைப்பின் முன்னணித் தலைவர்களில் சேலம் இராமசாமி முதலியார் தவிர அனைவரும் பார்ப்பனர்கள். 1884இல் இவர்கள் சென்னையில் தங்கள் அமைப்பின் முதல் மாநாட்டைக் கூட்டினர். காலனிய அரசுக்கு இந்தியத் தேசியம் என்ற கருத்தாக்கம் அன்றைக்குத் தேவையாக இருந்தது. 1881இல் பணி ஓய்வு பெற்ற ஃகியூம் (Hume) என்ற I.C.S. அதிகாரி இவர்களோடு சில கருத்து வேறுபாடுகளுடன் இணைந்து வேலை செய்ய முன்வந்தார். அதன் விளைவாக 1884இல் புனா நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு 8 பேர் சென்றனர். இவர்களில் 6 பேர் பார்ப்பனர்கள். 1881இல் பிரம்மஞான சபை நிறுவிய கர்னல் ஆல்காட்டும் பிளாவட்ஸ்கி அம்மையாரும் சென்னை வந்தனர். ஆரிய நாகரிகமும் வடமொழி வேதங்களும் உலகிற்கே வழிகாட்டும் என்பது அவர்களது கருத்தாகும். அழைப்பின் பேரில் அப்பொழுது கிறித்துவம் கணிசமாகப் பரவியிருந்த திருநெல்வேலிக்கு அவர்கள் சென்றனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பூரணகும்ப மரியாதையும் வரவேற்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் அவர்கள் இருவரும் கூட்டம் ஒன்றிலும் பேசினர். “மலைமீது கட்டப்பட்ட கோட்டைபோல இந்திய நாகரிகம் என்பது வேதங்களின் மீதும் புனித நூல்களின் மீதும் கால் கொண்டு நிற்கின்றது (An Indian Civilization resting upon the Vedas and other National Works is like a strong castlebuiltuponrocks)” என்பது ஆல்காட் சென்னையில் வெளியிட்ட கருத்தாகும். ஆக ஆரியன் என்ற கருத்தாக்கம், இந்து என்ற கருத்தாக்கம் இரண்டும் உருவாகிவந்த இந்திய தேசியத்திற்குள் புகுந்துகொண்டன என்பதற்கு இதுவே சாட்சியாகும். பின்னர் வந்த இந்திய தேசிய காங்கிரஸின் பெரும் தலைவர்களான திலகர், ‘ரானடே, பண்டித மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் ஆகியோரும் இதே கருத்தாக்கங்களையே உயர்த்திப் பிடித்தனர். 1927இல் தமிழ்நாட்டில் காந்தியடிகள் வெளிப்படையாகவே வர்ணாசிரமத் தர்மத்தை ஆதரித்துப் பேசினார். அதுவே பெரியாரைத் தேசிய இயக்கத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறச் செய்தது.
இந்தியத் தேசியத்திற்கோ பார்ப்பனியம் ஊடுருவிய போதெல்லாம் அதற்கான எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தது. அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள், திராவிட இயக்க மூலவர்கள், பெரியார் ஈ.வே.ரா என்று இந்திய தேசியத்திற்கு மாற்றான ஒரு கருத்தியலை முன்வைத்ததில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பங்குண்டு
பெரியாரின் போராட்ட உணர்வு, முழுவீச்சினை அடைவதற்குச் சற்று முன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு முயற்சியினை இங்கே பதிவு செய்வது நல்லது. 1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன் வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் செந்தமிழ்ச் செல்வி இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே, இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம். அதே இதழில் “சுமார்த்தக் கலப்பால் சிவாலயங்களில் ஏற்படும் இடையூறுகள்” என்று ஒரு கட்டுரையினை வழக்கறிஞரும் தமிழறிஞருமான கா.சு. பிள்ளை எழுதியுள்ளார். சங்கராச்சாரியாரைக் குருவாகக் கொண்ட ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் ஆகம விதிக்குப் புறம்பானவர்கள்; ஆகமநெறிக்குட்பட்ட சிவாலயங்களை அவர்கள் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்ற கா.சு. பிள்ளை திருநெல்வேலி சிவாலயத்தில் இந்த முயற்சி தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். கா.சு. பிள்ளையின் முயற்சி தோல்வியடைந்து, இந்து அறநிலையம்' என்ற சொல்லே சட்டச்சொல்லாயிற்று. ஆனால் திருநெல்வேலிச் சிவாலயத்தில் ஊடுருவ ஸ்மார்த்தர்கள் செய்யும் முயற்சி 60களிலும் 70களிலும் தொடர்கிறது. அண்மையில் 2003இல்தான் திருநெல்வேலி சைவர்கள் இப்போதுள்ள சங்கராச்சாரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவரைப் பின்வாங்கச் செய்தனர். ஆனால் இந்து என்ற சொல்தான் இந்தியத் தேசியத்திற்கு மற்ற மதங்களை நிராகரிக்கும் அடிப்படைக் கருத்தியலாக அமைந்திருக்கிறது என்பதனையும் நாம் மறுக்க இயலாது. இந்தப் போக்கிற்கு ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே தலைமை தாங்குகின்றனர் என்பதும் நம் கண்முன் அரங்கேறும் உண்மையாகும்.
COMMENTS